பொதுவாக தமிழக விவசாயிகளின் மனம் கவர்ந்த திருவிழாக்களில் ஒன்றாக மீன்பிடித் திருவிழா இருக்கிறது. குறிப்பாக மீன்பிடி திருவிழாக்கள் தென்மாவட்டங்களான மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் சிறப்பாக வருடந்தோறும் நடைப்பெறுகிறது.
மீன்பிடித் திருவிழா விவசாயிகள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றிருப்பதற்கும், வருடந்தோறும் மீன்பிடித் திருவிழாவினை கடைப்பிடிப்பது எந்தளவிற்கு இயற்கைச் சூழலுக்கு வலு சேர்க்கும் என்பது குறித்தும் வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திர சேகரன் பல்வேறு கருத்துகளை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
மீன்பிடித் திருவிழா ஏன் நடைபெறுகிறது?
பண்டைய தமிழர்கள் தங்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் நீர்ப்பாசன ஆதாரங்களாக விளங்கும் கண்மாய் , குளம் , குட்டைகளை பாதுகாக்கவும் அவற்றின் அருமை பெருமைகளை இளைய தலைமுறைகள் மறந்துவிடாமல் இருக்கவும், கிராம மக்கள் ஒரு தாய் மக்களாக (ஜாதி, மதம் பேதமின்றி) இணைந்திருக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு மீன்பிடி திருவிழா நடைப்பெறுகிறது.
பயிர் விளைச்சல் சிறப்பாக நடைபெற வேண்டுமென்று அதற்காக வருடந்தோறும் கண்மாயில் நீர் வற்றும் நிலையில், அறுவடை பணிகள் முடிந்தவுடன் ஊர்முழுக்க ஒன்றுகூடி மீன்பிடிப்பார்கள் பொதுமக்கள். இந்த விழா நடத்தாவிட்டால் விவசாயம் பாதிக்கும் என்கிற மனநிலை விவசாயிகள் மத்தியில் ஆழமாக முன்னோர்களால் பதியவைக்கப்பட்டுள்ளது.
மீன்பிடித் திருவிழா எப்போது தொடங்கும்?
கோடைக் காலத்தில் குளங்கள், கண்மாயினை தூர்வாரி வண்டல் மண்ணை எடுத்து தங்களுடைய நிலத்திற்கு இடுவார்கள் விவசாயிகள். கண்மாயில் தண்ணீர் வந்தவுடன் எல்லா பக்கங்களில் உள்ள கரைகள் உடைப்பு ஏற்படாமல் பாதுகாத்து குளங்களில் மீன்களை விடுவார்கள். குறைந்த காலத்தில் மிக வேகமாக வளரக்கூடிய கெளுத்தி, கெண்டை,ஆயிரை,கட்லா,விரால்,ஜிலோபி கெண்டை போன்ற மீன்குஞ்சுகளை விடுவார்கள்.
விவசாயப்பணிக்கு நீர்ப்பாசனம் போக எஞ்சிய தண்ணீர் வற்றிய நிலையில் கிராம கமிட்டியார் ஒன்று கூடி ஒரு நாளை தேர்வு செய்து ஊர் முழுக்க தண்டோரா போட்டு திருவிழா குறித்து அறிவிப்பார்கள்.
மீன்பிடித் திருநாளில் என்ன நடக்கும்?
மீன்பிடித் திருநாளான்று காலை 6 மணியளவில் ஊர்மக்கள் (சிறுவர்,மகளிர்) உட்பட ஒன்றுகூடி தங்களுடைய கையில் மீன்பிடிக்க பயன்படுத்தும் கருவிகளான ஊத்தா, அச்சா, வலை தூரி போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஒரு போர்க்கு புறப்படும் வீரர்கள் போல அணி வகுத்து இருப்பார்கள்.
கிராம கமிட்டியார் கிராமத் தெய்வங்களை வணங்கி (சூடம் காட்டி) வெள்ளை வீசுவார்கள் (வெள்ளைத்துண்டு கொடி போல அசைத்தவுடன்). ஒட்டுமொத்த கிராம மக்களும் குளத்தில் இறங்கி அவரவர் கைகளுக்கு அகப்பட்ட மீன்களை பிடிப்பார்கள். பிடித்த மீன்களை சமைத்து தங்களுடைய குடும்பத்திற்கும், அக்கம்பக்கம் உள்ள உறவுகளுக்கும் கொடுத்து மகிழ்வார்கள். அன்றைய தினம் கிராமம் முழுவதுமே மீன்வாசனை வீசும்.
மீன்பிடித் திருவிழாவினால் என்ன பயன்?
குளங்கள் கண்மாய்கள் பாதுகாக்க வேண்டிய மனநிலை உண்டாகும். இயற்கை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் ஜாதி மத பேதமற்ற சமுதாயம் உருவாகும். நீர் ஆதாரங்களை முறையாக வருடந்தோறும் பராமரிக்க வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகும். தமிழர்கள் வாழ்வில் மீன்பிடித்திருவிழா போன்ற அனைத்து விழாக்களும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் நல்ல படிப்பனையும் தரும் என்பதில் ஐயமில்லையென வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் (9443570289) தெரிவித்துள்ளார்.
Read more:
Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா?
Share your comments