இன்று உலக நாய்கள் தினம். பிராணிகளின் வளர்ப்பில் நாய்கள் எப்போதுமே முதலிடம் என்று கூறலாம். கிராமங்கள் ஆனாலும் சரி, நகரங்கள் ஆனாலும் சரி மக்களின் முதல் சாய்ஸ் நாய் தான். ஒரு சிலர் பூனையும் நாயும் சேர்த்து வளர்ப்பதுண்டு. நம் அன்றாட வாழ்க்கையில் நாய்களின் பங்கினையும் அவற்றின் அன்பு மற்றும் விஸ்வாசத்தை பாராட்டவும், உலகெங்கிலும் உள்ள வீடற்ற, ஆதரவற்ற மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்படும் நாய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இன்றைய தினம் சர்வதேச நாய்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
நாய் என்றால் நன்றியுள்ளது என்பது மட்டுமல்ல பாதுகாப்பானது, தோழமையானது.குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் போல. நாம் வீட்டில் எத்தனையோ விலங்குகள், பறவைகள் வளர்த்தாலும் நாய்க்கு மட்டும் தான் நம்முடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கொடுக்கப் படுகிறது. ஒரு சிலருக்கு நாய் என்றால் உயிர், ஒரு சிலருக்கு பயம், அருவருப்பு.அனைத்திற்கும் நம் மனநிலை தான் காரணம். இருப்பினும் இன்று நாய்கள் தினம் என்பதால் நாம் அனைவரும் நாய்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
உலகம் முழுவதும் நாய்கள் இருந்தாலும் அவை அனைத்தும் பார்ப்பதற்கு ஒன்று போல் இருந்தாலும் தோற்றத்தில் பல்வகை வேறுபாட்டுடன் காணப்படுகின்றன. அவற்றின் தோற்றம், எடை, நிறம், உயரம் மற்றும் நடத்தை ஆகினவற்றை ஒப்பீட்டு ஒரே பண்புகள் கொண்டவையாக இருக்கும்படி அமையப்பெற்றவற்றைத் தனித்தனி நாய் இனங்களாக வகைப்படுத்தியுள்ளனர். எந்த இனத்தைச் சேர்ந்தவை எனச் சான்று வழங்கும் உலகளாவிய அமைப்பான “கென்னல் கிளப்” அமைப்பானது 350 நாய் இனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரிடமும் அன்பாக பழக கூடிய செல்லப் பிராணி என்ற கூறலாம். நாய் வளர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பல்வேறு வகைகளான நாய் இனங்கள் இருந்தாலும் அவற்றினை பின்வரும் ஐந்து காரணங்களுக்காக வளர்கின்றனர். எனவே அவைகளை பயன்பாடு அறிந்து இவ்வாறு அழைக்கிறோம்.
- தோழமை நாய்கள்
- பாதுகாவல் நாய்கள்
- வேட்டை நாய்கள்
- பணி நாய்கள்
- வேட்டை மீட்டெடுப்பு நாய்கள்
தோழமை நாய்கள்
இவ்வகை நாய்கள்தான் இன்று பெரும்பாலான இல்லங்களின் சாய்ஸ். காண்பதற்கு அழகிய தோற்றத்துடனும், விளையாட்டுப் பண்பு நிறைந்தவையாகவும் காணப்படும். தனிமையில் வசிப்பவர்கள், முதுமை காரணமாக தனித்து வசிப்பவர்கள் என அனைவருக்கும் உற்ற துணையாக இவ்வகை நாய்கள் இருக்கும். மனோ தத்துவ நிபுணர்கள் கூறுகையில் செல்ல பிராணிகளுடன் வசிப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் உண்டாகாது என்கிறார்கள்.
பாதுகாவல் நாய்கள்
பொதுவாக காவல் நாய்கள் தோற்றத்தில் முரட்டு தனத்தை கொண்டதாக இருக்கும். ஆக்ரோசமான பண்பையும் கொண்டிருக்கும். அறிமுகம் இல்லாதவர்கள், அன்னியர்களைக் கண்டால்கடுமையாக தாக்கும் இயல்பு கொண்டவை. இவை பெரும்பாலும் வீட்டைக் காப்பதற்காகவும், தனிமையில் இருப்பவர்கள், பாதுகாப்பின்றி வசிப்பவர்களுக்கு இவை உற்ற நண்பன் என்றே சொல்லாம். நட்டு நாய்களே இதற்கு சரியான தேர்வாகும்.
பணி நாய்கள்
நாய்கள் மனிதர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. வெறுமனே ஒரு செல்லப்பிராணியாக வளர்க்காமல் பல்வேறு வகையான வேலைகளைச் செய்யப் பழக்கப்படுத்தப் பட்டதாய் இருக்க வேண்டும். காவல் துறை, துப்பறியும் துறை போன்றவற்றில் நாய்களின் பங்கு இன்றமையாதது. ஷெப்பர்ட் இன நாய்கள் ஆடு மேய்க்கப் பயன்படுகின்றன. மோப்ப நாய்கள் குற்றவாளிளை கண்டறிதல், வெடிபொருள்களைக் கண்டறிதல் போன்றவற்றிற்குப் பயன்படுகின்றன.
வேட்டை நாய்
வேட்டை நாய் என்பது பழங்காலம் தொட்டே அரசப் பரம்பரையில் கண்காணிப்பில் ஒரு சில குறிப்பிட்ட நாய் இனங்கள் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வேட்டைக்காரர்களால், கண்ணில் தென்படும் இரையை வேட்டையாடுவதற்காகவே இவை பெரும்பாலும் வளர்க்கப்டுகின்றன. நம் தமிழகத்தில் வேட்டைக்காரர்களால் விரும்பி வளர்க்கப்படும் வேட்டை நாய் வகைகளில் சில. 1. இராஜபாளையம் நாய், 2. கோம்பை நாய், 3. சிப்பிப்பாறை நாய், 4. கன்னி நாய் போன்றவை ஆகும்.
வேட்டை மீட்டெடுப்பு நாய்கள்
வேட்டை மீட்டெடுப்பு நாய்கள் என்பது வேட்டையர்களால் உருவாக்கப்பட்டவை. இவ்வகை நாய்களின் வேலை வேட்டையாடப்பட்ட அல்லது சுடப்பட்ட இரையை மீட்டெத்துக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை. லேப்ரடார் ரெட்றைவர், கோல்டன் ரெட்றைவர் போன்றவை இவ்வகை நாயினங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
இந்நாளில் அருகிலிருக்கும் நாய்களை பாதுகாக்கவும், நேசிக்கவும் முயற்சிப்போம்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments