1. செய்திகள்

புதிய பயிர் ரகங்கள் அறிமுகம்: விவசாயிகளுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
New Crops Introduced

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி பல்கலைக் கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி தலைமையில் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 23 புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதிய பயிர் ரகங்கள் (New Crops)

பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி பேசுகையில், “'தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் 18 கல்லூரிகளும், 40 ஆராய்ச்சி நிலையங்களும், 15 வேளாண் அறிவியல் நிலையங்களும் இயங்கி வருகின்றன. இந்த நிலையங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப புதிய ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த ஆராய்ச்சிகளின் மூலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திலிருந்து ஆண்டுதோறும் புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் வனப்பயிர்கள் என 23 புதிய ரகங்கள் தமிழ்நாடு அரசின் புதிய ரகங்கள் வெளியிட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 10 புதிய தொழில்நுட்பங்களும், 6 புதிய பண்ணை இயந்திரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த 23 ரகங்களில் 4 புதிய நெல் ரகங்கள் உட்பட 16 வேளாண் பயிர் ரகங்கள் உள்ளன. இவை தவிர சர்வதேச சிறுதானிய பயிர்கள் ஆண்டாக கொண்டாடப்படும் இவ்வருடத்தில் சிறுதானிய பயிர்களின் சாகுபடியினை ஊக்குவிக்கவும் அதனை உட்கொள்ளும் அளவினை அதிகரிக்கும் வகையில், 4 புதிய சிறுதானிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பயறு வகைகளில் 3 ரகங்களும், எண்ணெய் வித்து பயிர்களில் 2 ரகங்களும், மக்காச்சோளம் கரும்பு மற்றும் பசுந்தால் உர பயிரான சணப்பையில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டுள்ளது.

தோட்டக்கலை பயிர்களில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பீர்க்கை மற்றும் குத்து அவரையில் தலா ஒரு ரகமும், மலர் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் மார்கழி மல்லி என்ற மலர் ரகமும் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் மானாவரி மற்றும் தரிசு நிலங்களில் சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கோடு வன பயிர்களில் சுமார் 4 புதிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பயிர் ரகங்களையும் தொழில் நுட்பங்களையும் விவசாயிகள் பயன்படுத்தி வேளாண் சாகுபடியினை அதிகரிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

புதிய பயிர் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தங்களது விவசாயத்தை மேம்படுத்தவும், அதிக வருவாய் ஈட்டவும் நல்ல வர்த்தக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

தொப்பையை குறைக்குமா ஏலக்காய்? தெரிந்து கொள்ளுங்கள்!

பசு நெய் vs எருமை நெய்! யாருக்கு எது ஆரோக்கியமானது?

English Summary: Introduction of new crop varieties: good business opportunity for farmers! Published on: 16 February 2023, 11:26 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.