புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் முறை இன்று முதல் தொடங்கியது. அதே நேரத்தில் புதிய 1000 ரூபாய் நோட்டு வரப்போவதாக பரவிய தகவலுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்றைய தினம் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கு மாற்றாக புதிய ரூ.1,000 கரன்சி நோட்டுகள் வர இருப்பதாக பரவிய தகவல்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, "இப்போது அத்தகைய திட்டம் எதுவும் இல்லை எனவும், இணையத்தில் பரவும் தகவல் வதந்தி" என்றும் சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் ”வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான வாய்ப்பு செவ்வாய்க்கிழமை (இன்று) தொடங்கும் என்பதால், பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றார். மேலும் கடந்த பணமதிப்பிழப்பு காலத்தில் சென்றது போன்று வங்கிகளுக்கு பொதுமக்கள் ஒரே நேரத்தில் விரைந்து செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தினார். 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.”
பொது மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ரூ.2,000 நோட்டுகளை வாங்க மறுக்கின்றனர் என தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றதே என்கிற கேள்விக்கு பதிலளித்த ஆர்பிஐ கவர்னர், ”2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற நிர்ணயிக்கப்பட்ட தேதி வரைக்கும் பரிவர்த்தணைக்கு 2000 ரூபாய் நோட்டு செல்லுபடியாகும்” என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
“2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்குவது என்பது, ரிசர்வ் வங்கியின் நாணய மேலாண்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதி என குறிப்பிட்டார். நீண்ட காலமாக, ரிசர்வ் வங்கி சுத்தமான நோட்டுக் கொள்கையை பின்பற்றி வருகிறது,'' என்றார்.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பெரும்பாலான நோட்டுகள் கருவூலத்திற்குத் திரும்பும் என்றும் மற்ற நோட்டுகளுக்கு தட்டுப்பாடு இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ பொதுமக்களை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. “புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சியில் வெறும் 10.8% மட்டுமே ரூ.2,000 கரன்சி நோட்டுகள் மட்டுமே. ஆர்பிஐயிடம் மட்டுமின்றி வங்கிகளால் இயக்கப்படும் கரன்சி பெஸ்ட்களிலும் ஏற்கனவே போதுமான அளவு அச்சிடப்பட்ட மாற்று நோட்டுகள் உள்ளன. எனவே பொதுமக்கள் தேவையின்றி கவலைப்பட எந்த காரணமும் இல்லை. எங்களிடம் போதுமான பணம் கையிருப்பு உள்ளது” என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் தெரிவித்துள்ளார்.
திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான வாய்ப்பு இன்று முதல் தொடங்கியது. பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி பணத்தை மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
Share your comments