மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும் எனவும், அதற்கான அறிவிப்பு நவராத்திரியன்று வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பிரச்சினை வந்த பிறகு அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் சென்ற ஆண்டின் மத்தியில் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. இந்த அகவிலைப்படி என்பது பணவீக்கம் - விலைவாசி நிலவரங்களைப் பொறுத்து கணக்கிட்டு வழங்கப்படுகிறது.
அகவிலைப்படி (Allowance)
அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது என்று மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வர வாய்ப்புள்ளது. இந்தியாவில் பணவீக்கம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது உயர்ந்துள்ளதால் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரையில் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் 38 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். எனினும் ஒரு சில ஊடகங்கள் மற்றும் நிபுணர்கள் 5 சதவீத உயர்வு இருக்கும் என்று கூறுகின்றனர். எனினும் குறைந்தபட்சம் 4 சதவீத உயர்வை எதிர்பார்க்கலாம்.
அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை இந்த மாத இறுதியில் வரவிருக்கும் நவராத்திரி பண்டிகை அன்று மத்திய அரசு வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. நவராத்திரி போன்ற சிறப்பு வாய்ந்த நாட்களில் அரசு ஊழியர்களுக்கான இந்த முக்கியமான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க
ஓய்வு பெற்ற பிறகு ரூ.50,000 பென்சன்: இந்த பென்சன் திட்டத்தை பாருங்க!
Share your comments