தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாசநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா உரையாற்றினார்.
அப்போது, ‘அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமி மலை முருகன் திருக்கோவில் எனது தொகுதியின் கீழ் உள்ளது.
சமீபத்தில் நான் அங்கு ஆய்வுக்குச் சென்றிருந்தேன். அங்கு வரும் பக்தர்கள், வயதானவர்கள், மூட்டுவலி உடையவர்கள் படிகளில் ஏற முடியாமல் தவித்து வருகின்றனர். படிகளில் ஏறிச் சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்ய மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சுவாமி மலை முருகன் கோவிலில் மின்தூக்கி அமைத்துத்தர அமைச்சர் முன்வருவரா?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘நான்காம் படைவீடான சுவாமி மலை குறித்துப் பேசிய உறுப்பினர் முதலில் நன்றி சொல்வார் என எதிர்பார்த்தேன். கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையின்படி அங்கு தங்கும் விடுதிக்கு ஒப்பந்தம் அறிவித்து விடுதி கட்டப்படுவதற்கான பணிகளை தமிழக முதல்வர் துவங்கி வைக்க இருக்கிறார்.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 5 திருக்கோவில்களில் மின்தூக்கி அமைப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 7-ஐ தாண்டியுள்ளது. கேட்டதெல்லாம் தருகின்ற அரசு இது. எனவே சுவாமி மலைக்கோவிலில் கள ஆய்வு மேற்கொண்டு அதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும்’ என்றார்.
இதனிடையே, முருகன் கோவிலுக்காக இஸ்லாமியர் ஒருவர் குரல் கொடுத்துப் பேசியது சட்டப்பேரவையில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மத நல்லிணக்கம் என்றால் என்ன என்பதை தமிழ்நாட்டைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என்று இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களிலும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க..
உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம்!
Share your comments