திமுகவின் தேர்தல் அறிக்கையில் முதன்மையான வாக்குறுதியாக கருதப்பட்ட குடும்பத் தலைவிக்கான ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இத்திட்டம் செப்.15 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
காஞ்சிபுரத்தில் நடைப்பெறும் நிகழ்வில், இத்திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தேர்வான பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
பயனாளிகளின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி அனுப்புவதோடு சோதனை முயற்சியாக முதற்கட்டமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 1 ரூபாயினை நேரடியாக வரவும் வைக்கப்பட்டு வருகிறது.
சரியான பயனாளிக்கு தான் பணம் செல்கிறது என்பதை உறுதி செய்யும் வகையில் இச்சோதனை மேற்கொள்ளப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் அதுத்தொடர்பான தகவலும் ஒரு சில விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட உள்ளது. இதற்கென பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.
அதே நேரத்தில் ஏடி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சில தினங்களுக்கு முன்பு அரசு உயர் அலுவலர்களிடத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll Free எண்ணும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வாகியுள்ளனர். மீதமுள்ள நபர்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அதற்கான காரணமும் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தவர்களில் யாருடைய விண்ணப்பங்கள் எல்லாம் எந்த காரணங்களுக்காக நிராகரிப்படும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
- ரூபாய் 2.5 இலட்சத்திற்குமேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
- குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள். ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.
- மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
- சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
- ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும்மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
- ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை (கைம்பெண்) ஓய்வூதியம், அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.
மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லை. அதை நேரத்தில் வேறு ஏதாவது காரணத்திற்காக உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அரசின் சார்பில் விரைவில் வெளியிடப்படும் தொடர்பு எண் மூலம் விளக்கங்களை பெறுங்கள்.
பெண்களுக்கான விலையில்லா பேருந்து பயணம் திட்டத்தினைத் தொடர்ந்து, குடும்பத் தலைவிக்களுக்கான உரிமைத் தொகைத் திட்டமும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
Today gold Rate: தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.320 குறைந்தது!
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது 24 உத்தரவு- முழு விவரம் உள்ளே
Share your comments