தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழையும், மற்ற பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. மேலும் இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை நல்ல மழை பெய்தது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர், கிண்டி, அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர், ராயப்பேட்டை, விமான நிலையம், ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது.
தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சுற்றி உள்ள நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, பெரிய குளம் போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், விருதுநகர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. அதே போன்று வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக தமிழகதின் வட மாவட்டங்கள், கடற்கரையோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்றைய வானிலை
வளிமண்டலத்தின் மேலடுக்கில் உருவாகிய காற்றின் பெருங்கூட்டம் தற்போது சென்னைக்கும் நாகப்பட்டினத்துக்கு இடையே உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில், புதுச்சேரியில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மேலும் இரண்டு தினங்களுக்கு (இன்று மற்றும் நாளை) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசனாது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்.
திருவண்ணாமலை தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும், தமிழகத்தின் வட மாவட்டங்களான கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரன் நேற்று தெரிவித்தார்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments