தஞ்சாவூர் திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தமிழக கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். போராட்டத்தின் 15-வது நாளான இன்று, கைகளை கட்டி, வாயை மூடிக்கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக.முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச்செயலாளர் தங்க.காசிநாதன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் போராட்டம் (Farmers Protest)
இப்போராட்டத்திற்கு ஆதரவாக கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”இந்த ஆலையின் உரிமையாளர் மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு 1 நாள் சிறைப்படுத்தப்பட்டார். இந்த மோசடி குற்றவாளி, இந்த ஆலைக்கு கரும்பு சாகுபடி செய்து கொடுத்த விவசாயிகளுக்கு 2017-18-ம் ஆண்டில் உரிய கரும்புக்கான விலையை வழங்காமல் மோசடி செய்துள்ளார்.
அவர்கள் விவசாயிகளுக்கு, வழங்க வேண்டிய தொகையில் பிடித்தம் செய்து வங்கிகளுக்கு செலுத்தி விட்டதாக தகவலை கூறிவிட்டு, வங்கிகளிலும் விவசாயிகளின் பெயரில் கூடுதலாக கடன் சுமை ஏற்றி வைத்துள்ளனர். இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் வங்கிகளில் அவர்களது பெயரை கருப்பு பட்டியலில் இடம்பெறச் செய்தனர்.
இந்த ஆலையின் நிர்வாகத்திற்கு எதிராக திமுக அரசு ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு முன், எங்களோடு இருந்து போராடியுள்ளார்கள். தற்போது அவர்களின் நிலை அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. இந்த மோசடி ஆலையை, ஓர் அதிகாரமிக்க பின்புலத்தோடு உள்ளவர்கள் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆலை விற்பனையானது குறித்து, தமிழக முதல்வருக்கு தெரிந்து நடைபெற்றுள்ளதா, அப்படி அவருக்கு தெரிந்து நடந்திருந்தால், அந்த ஆலை நிர்வாகம் செய்திருக்கும் மோசடி நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய விவசாயிகளுக்கு கடன் மற்றும் நிலுவைத்தொகையினை யார் வழங்கப் போகிறார்கள், இது குறித்து தமிழக முதல்வர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
உடனடியாக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும், உங்களை நம்பி வாக்களித்த ஆட்சி மாற்றம் வந்தால், இந்த ஆலை விஷயத்தில் தீர்வு கிடைக்கும் என மன்றாடிய விவசாயிகளுக்கு, இன்று நீங்களே துரோகம் செய்கிறீர்களோ என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள், விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை கைவிட்டு, ஆட்சியாளர்கள் தீர்வு காணவேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க
பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்த வேளாண் துறை: விவசாயிகளுக்கும் கட்டுப்பாடு!
தென்பெண்ணை ஆற்றில் இரசாயன நுரை: உடனே நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!
Share your comments