சோமாலியாவில் இருந்து புதிய வெட்டுக்கிளிக் கூட்டம், இம்மாத இறுதியில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழையும் ஆபத்து இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள் முதற்கட்டமாக ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்திர பிரதேம் உள்ளிட்ட வட மாநிலங்களில் விளைநிலங்களை நாசம் செய்தன. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது.
இவற்றைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஹெலிகாப்டர் உள்ளிட்டவையும் வெட்டுக்கிளி ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதன் ஒருபகுதியாக குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஒரு இடம், ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர், பார்மர், ஜோத்பூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்கள் உட்பட 36 இடங்களில் வெட்டுக்கிளி வட்ட அலுவலகங்கள் மூலம், வெட்டுக்கிளிகளுக்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மஞ்சள் நிற வெட்டுக்கிளிகள்
அதில், இப்பகுதிகளில் முழுமையாக வளர்ச்சி பெறாத ஆயிரக்கணக்கான இளஞ்சிவப்பு வண்ண வெட்டுக்கிளிகளும், முழுமையாக வளர்ச்சி பெற்ற மஞ்சள்நிற வெட்டுக்கிளிகளும், கூட்டம் கூட்டமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின், உணவு வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள வெட்டுக்கிளிகள் நிலவர அறிக்கையில், ஹார்ன் ஆப் ஆப்பிரிக்கா என்னும் இடத்திலிருந்து புறப்பட்டு பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் கூட்டங்கூட்டமாக படையெடுப்பது, வரவிருக்கும் வாரங்களிலும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவில் இருந்து இந்த வெட்டுக்கிளிக் கூட்டங்கள், கிழக்கு முகமாக வடக்கு நோக்கிப் பயணிக்கின்றன. எனவே இவற்றிலிருந்து, சில வெட்டுக்கிளிக் கூட்டங்கள் இந்தியப் பெருங்கடல் மார்க்கமாக இந்த மாத இறுதியில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழையும் ஆபத்து இருக்கிறது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.
மேலும் படிக்க...
துரத்தித் துரத்திக் கடிக்கும் அவற்றிடம் சிக்கிக்கொள்கிறீர்களா ?- தப்பித்துக்கொள்ள எளிய வழிகள்!
அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எது எது தெரியுமா..?
Share your comments