மதுரை மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக பதவிக்குவந்துள்ள கார்த்திகேயன் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் நலன் கருதி பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் இறைச்சி, மீன் கடைகளை முறையாக பதிவு செய்ய வலியுறுத்தியதோடு அவர்களுக்கு புதிய உரிமை முறையை அறிமுகப்படுத்துகிறார். முறையாக உரிமம் பெறாததால் ரோடு ஓரத்தில் கடை அமைத்திருக்கும் இவர்கள் கழிவுகளை ஆங்காங்கே கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறினார்.
மேலும் இறைச்சிகளில் கலப்படம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருப்பதால் இதனை தடுக்க தங்களது கடைகளை மாநகராட்சியில் பதிவு செய்து அதற்கு உரிமை தொகையை செலுத்த வேண்டும். ஒரு சதுர அடிக்கு ரூபாய் 10 வீதம் கடைகளின் அகலத்தை பொருத்து உரிமத் தொகை செலுத்தபட வேண்டும். கட்டணம் செலுத்தாத கடைகளுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
அதேபோல் இறைச்சிகளை வதை செய்ய மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே செய்ய வேண்டும், மீறி கடைகளில் வதை செய்தால் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கழிவு நீர் வாய்க்கால்களில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும்.
மேலும், மக்கள் வீடுகளில் கால்நடைகள் அதாவது ஆடு,மாடு, நாய், குதிரைகளை வளர்த்தால் அதனை மாநகராட்சியில் பதிவு செய்து ஆண்டுக்கு ரூபாய்10 வரி செலுத்தவேண்டும் என்று நடைமுறை உள்ளது. ஆனால் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளை யாரும் பதிவு செய்வதில்லை. இதனை யாரும் சரியாக பின்பற்றாததால், வீட்டில் பிராணிகளை வளர்த்து முறையாக பராமரிப்பின்றி ரோடுகளில் விட்டுவிடுகிறார்கள், இதனால்பொது மக்களுக்கு நிறைய இடையூறு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய இனி வீட்டில் வளர்க்கும் நாய்கள் கூட பொது மக்களை தொந்தரவு செய்தால் ரூபாய் 500 அபராதமும், குதிரைகளை சாலையில் பராமரிப்பின்றி விட்டுவிட்டால் ரூபாய் 5000 அபராதமும் மற்றும் அதன் பராமரிப்பிற்கு தினமும் 100 ரூபாய் வசூலிக்கப்படும்.
இந்த புதிய நடைமுறைகள் தொடர்பாக மதுரை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அபராத விதிப்பு தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக மதுரை மாநகராட்சியில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடுகளை தடுக்க மேற்கண்ட நடைமுறைகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க:
TVS Jupiter-ரை ரூ .2,420 தவணையில் வாங்க வாய்ப்பு! விவரம் இதோ!
17 வங்கிகளில் 5,000 கோடி டெபாசி்ட் செய்த இந்திய கிராமம்!தொழில் விவசாயம்!
Share your comments