விவசாய பணிகளில் டிராக்டரின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறார். இந்நிலையில் விவசாய மற்றும் சந்தை பயன்பாட்டுக்கான டிராக்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் மஹிந்திரா டிராக்டர் நிறுவனம் மார்ச் 2024 -ல் தனது விற்பனை நிலவரத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகள் உட்பட மொத்தம் 26,024 டிராக்டர்களை கடந்த மார்ச் மாதம் மட்டும் விற்பனை செய்துள்ளது மஹிந்திரா நிறுவனம். கடந்த ஆண்டு (2023- மார்ச்) இதே காலக்கட்டத்தில் 35,014 டிராக்டர்களை விற்பனை செய்து இருந்ததும் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
மஹிந்திரா குழுமம்:
1945 இல் நிறுவப்பட்ட மஹிந்திரா குழுமம், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,60,000 பணியாளர்களைக் கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்தியாவில் விவசாய உபகரணங்கள், பயன்பாட்டு வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணி வகிக்கிறது. விவசாயிகளின் நன்மதிப்பை பெற்று உலகின் மிகப்பெரிய டிராக்டர் நிறுவனமாக மஹிந்திரா திகழ்கிறது.
மார்ச் 2024-க்கான டிராக்டர் விற்பனை புள்ளி விவரங்களை சமீபத்தில் அறிக்கையாக வெளியிட்டு இருந்தது மஹிந்திரா நிறுவனம். மார்ச் மாதத்தில் உள்நாட்டு விற்பனை 24,276 யூனிட்டுகளாக இருந்தது. இது மார்ச் 2023 இல் விற்பனை செய்யப்பட்ட 33,622 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவினைக் கண்டுள்ளது. சரிவின் விகிதம் 28 சதவீதம் ஆகும்.
அதிகரித்த ஏற்றுமதி விற்பனை:
உள்நாட்டில் டிராக்டர் விற்பனையானது சரிவினை சந்தித்தாலும், டிராக்டர் ஏற்றுமதி ஒரளவு வளர்ச்சி அடைந்துள்ளது.
நடப்பாண்டு மார்ச் மாதம் மொத்தம் 1748 யூனிட் டிராக்டர் விற்கப்பட்டுள்ளது. இது மார்ச் 2023-ல் விற்பனை செய்யப்பட்ட 1392 யூனிட் டிராக்டர் உடன் ஒப்பிடுகையில் 26 சதவீத வளர்ச்சியாகும்.
மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் பண்ணை உபகரணத் துறையின் தலைவர் ஹேமந்த் சிக்கா விற்பனை நிலை குறித்து தெரிவிக்கையில், ”உள்நாட்டில் விற்பனை சரிந்தப் போதிலும், நாங்கள் நம்பிக்கையுடன் தான் இருக்கிறோம். தோட்டக்கலைப் பயிர் உற்பத்தி மற்றும் ரபி பருவ கோதுமை உற்பத்திக்கான அரசாங்க முன்கூட்டிய மதிப்பீடுகள் விவசாயிகளுக்கும் நம்பிக்கை உணர்வை அளித்துள்ளது. கூடுதலாக, வரவிருக்கும் தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்கிற முன்னறிவிப்பின் படி, வரும் மாதங்களில் டிராக்டரின் தேவை அதிகரிக்கக்கூடும் என்றார்”.
கடந்த ஆண்டு வட மாநிலங்களில் பருவம் தவறி பெய்த கனமழை மற்றும் தென் மாநிலங்களில் கர்நாடகா பகுதிகளில் பொய்த்துப் போன மழை ஆகியவற்றால் விவசாயிகள் தாங்கள் எதிர்பார்த்த விளைச்சலை பெற முடியாமல் போனது. இதுவும் ஒருவகையில் டிராக்டர் போன்ற விவசாய உபகரணங்களின் விற்பனை தொடர்ந்து குறைந்து வருவதற்கு காரணமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
Read more:
Share your comments