அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக சில ஆண்டுகளுக்கு முன்னால் சிறப்பு ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டமானது அமைப்புசாரா தொழிலாளர்களாகப் பணிபுரியும் நபர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதிப் பாதுகாப்பை வழங்கிடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது ஆகும்.
மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் இந்தத் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், திருமணம் ஆன தம்பதியர் இணையும் பட்சத்தில், ஓய்வு காலத்தில் அவர்கள் ஆண்டுதோறும் ரூ.72,000 ஓய்வூதியமாக பெற முடியும்.
வீட்டு வேலை செய்யக் கூடிய பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், சத்துணவு திட்டப் பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், செங்கல் சூளை பணியாளர்கள், ஷூ தைப்பவர்கள், குப்பை பொறுக்கும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், ரிக்ஷா வண்டி ஓட்டுநர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், பீடி தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், லேத் பணியாளர்கள் மற்றும் மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் அல்லது அதற்கு குறைவான ஊதியம் ஈட்டுபவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். 18 முதல் 40 வரையிலான நபர்கள் இதில் சேர்ந்து கொள்ளலாம்.
தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் இணைபவர்கள், மத்திய அரசின் மற்றொரு திட்டமான தேசிய ஓய்வூதியத் திட்ட உறுப்பினர்கள், பணியாளர்களுக்கான அரசுக் காப்பீட்டுக் கழக பணியாளர்களாகவோ அல்லது இபிஎஃப்ஓ திட்டப் பணியாளர்களாகவோ இருக்கக் கூடாது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
திட்டத்தில் சேரும் ஒவ்வொரு நபரும் 60 வயது பூர்த்தி அடைந்த பிறகு குறைந்தபட்சம் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெற முடியும். ஓய்வூதியம் பெற வேண்டிய சமயத்தில் பயனாளி இறந்துவிட்டால், அவரது வாழ்க்கைத் துணைக்கு 50 சதவீத ஓய்வூதியத் தொகை குடும்ப ஓய்வூதியமாகக் கிடைக்கும்.
திட்டத்தில் சேருவது எப்படி
ஒரு மொபைல் ஃபோன், வங்கி சேமிப்புக் கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அருகாமையில் உள்ள இ -சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பம் செய்யலாம்.
தம்பதியர் ஆண்டுதோறும் ரூ.72,000 பெறுவது எப்படி
திட்டத்தில் சேரும்போது உங்களுக்கு 30 வயது என வைத்துக் கொண்டால், நீங்கள் மாதந்தோறும் ரூ.100 தவணைத் தொகை செலுத்துவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் ரூ.100 சேர்த்து ஆக மொத்தம் மாதந்தோறும் 200 செலுத்தி வருவீர்கள். உங்களுக்கு 60 வயது பூர்த்தி அடையும்போது, ஒரு நபருக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வீதம் மொத்தம் ரூ.72,000 ஓய்வூதியமாக கிடைக்கும்.
மேலும் படிக்க:
Share your comments