மேட்டூர் அணை வேகமாக நிரம்புவதால், அடுத்தாண்டு குறுவை பாசனம், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை (Mettur Dam), 93.4 டி.எம்.சி., கொள்ளளவு உடையது.
நீர்வரத்து
இந்த அணை வாயிலாக நாமக்கல், கரூர், சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகிறது. கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் நீர், மேட்டூர் அணையில் தேக்கப்படுகிறது. நடப்பாண்டில் ஜூன் முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்கிறது. தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையிலும், அணைக்கு நீர்வரத்து அதிகம் உள்ளது.
நேற்றைய நிலவரப்படி, வினாடிக்கு 11 ஆயிரத்து 772 கன அடி நீர்வரத்து கிடைத்தது. இதனால், அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது 83.6 டி.எம்.சி., நீர் கையிருப்பு உள்ளது.
வாய்ப்பு
டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், பாசனத்திற்கான நீர் தேவை குறைந்துள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
விரைவில், அணை முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளது. அணையில் கடந்தாண்டு இதே நாளில், 60.2 டி.எம்.சி., நீர் மட்டுமே இருந்தது. இதை வைத்து, நடப்பாண்டு ஜூனில் குறுவை பருவ நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. தற்போது அதைவிட, 20 டி.எம்.சி.,க்கு மேல் கூடுதலாக நீர்இருப்பு உள்ளது. எனவே, அடுத்தாண்டு குறுவை பருவ நெல் சாகுபடிக்கான நீர்திறப்பு பிரகாசமாகி உள்ளது. பல்வேறு மாவட்டங்களின் கோடைக்கால குடிநீர் தேவையும் பூர்த்தியாக வாய்ப்புள்ளது. இதனால், நீர்வளத் துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க
Share your comments