தமிழகத்தில் சிறு குறு தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சிறப்பு கடன் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், நூறு நாள் வேலைத்திட்ட பணிகள் நடைபெறும் இடங்களுக்கே வங்கி அதிகாரிகள் நேரில் சென்று கூலிகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் (State Bankers committe )நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உலகமே கொரோனா பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கும் சவாலான இக்கால கட்டத்தில், கொரோனா தொற்றைத் தடுப்பதற்கும், இந்த நோயினால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்கும், கடந்த நான்கு மாதங்களாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து வருவதன் காரணமாக, தமிழ்நாட்டில் பூரண குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை மிக அதிகமாகவும், இந்த நோயினால் ஏற்படும் இறப்பு மிகக் குறைவாகவும் தமிழகத்தில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு கடன் திட்டங்களையும் அவர் அறிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை
ஊரடங்கின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்கள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளன. இந்த சூடிநநிலையைஎதிர்கொள்வதற்கு மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பல்வேறு முயற்சிகள் மற்றும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளன. பல்வேறு தொழில்களுக்கு இந்த நேரத்தில் அத்தியாவசியத் தேவையாக இருப்பது வங்கிகளின் கடன் உதவி மட்டுமே. தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக கடன் வைப்பு தொகை விகிதம் ( Credit Deposite ratio )நூறு சதவீதத்தை காட்டிலும் அதிகமாகவே இருந்துள்ளது. இது, தமிழ்நாட்டில் தொழில் செய்வதற்கு தொழில் நிறுவனங்கள் கடன்களை பெற அதிகளவில் முன்வருகிறார்கள் என்பது மட்டுமல்லாமல், வங்கிகளும் முனைப்போடு செயல்படுவது தெளிவாகிறது. நடப்பு ஆண்டிற்கான ரூ.4,21,404 கோடி ரூபாய் முதலீடு உள்ள ஆண்டுக் கடன் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.
வேளாண் துறைக்கு ரூபாய் 1,48,859 கோடி
குறு, சிறு தொழில்களுக்கு 92,075 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
விவசாயிகளுக்கான கடன் திட்டம்
மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இருப்பதால், டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி முழுவீச்சில் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு வேளாண் உற்பத்தி மிகவும் இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டு, விவசாயத்திற்கான கடன் உதவியை வங்கிகள் உடனுக்குடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இது வரை 20 லட்சத்து 20 ஆயிரம் உழவர் கடன் அட்டைகள் (Kisan credit card scheme )விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கடன் அட்டைகளின் மூலம் விவசாயிகள் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை விதைகள், உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் வாங்க, வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் வங்கிகள் மூலமாக கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறப்பு முகாம்களை நடத்தி, உழவர் கடன் அட்டைகளை அனைத்து விவசாயிகளுக்கும் தாராளமாக வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறு-குறு தொழில்களுக்கான கடன் திட்டம்
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களில் சுமார் ஒரு கோடி மக்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 3 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதி உதவி அதிகளவில் தமிழகத்திற்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், ஊரகப் பகுதி மக்களின் வருமானத்தைப் பெருக்கவும், உலக வங்கி உதவியுடன் ஊரக புத்தாக்கத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், புதிதாக தொழில்களை தொடங்கவும் 300 கோடி ரூபாய் கொரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
மகளிர் சுய உதவிக்குழுவுக்கான கடன் திட்டம்
தமிழ்நாட்டில் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்திடவும், வறுமையைப் போக்கவும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்க வங்கிகளுக்கு நடப்பு நிதி ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் கடனுதவி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உப இலக்காக ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 5,00 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம்
தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் 35 லட்சம் மக்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் தங்களுக்கான கூலித்தொகையை வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று வாங்கக்கூடிய சூழ்நிலை இருந்து வருகிறது. தற்பொழுது, கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்ற காரணத்தால் ஏழை எளிய மக்கள் வங்கிக்குச் சென்று கூலித் தொகையை வாங்க இயலாத சூழங் நிலவி வருகிறது. இந்தக் காலகட்டத்தில் மூன்று மாத காலத்திற்கு மட்டும், வங்கி அதிகாரிகள் நேரடியாக 100 நாள் வேலைத்திட்டம் நடைபெறும் இடங்களுக்குச் சென்று அதன் பணியாளர்களிடம் கூலிகளை நேரடியாக வழங்கி வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Share your comments