புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்பில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தால் இரயில்வேக்கு ரூ.1,200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
1200 கோடி இழப்பு
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் ரயில் பாதைகளில் விவசாயிகள் போராட்டம் தடத்தி வருகின்றனர். இதனால், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ரயில்வேக்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. போராட்டம் காரணமாக இதுநாள் வரை 2225க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களை இயக்க முடியவில்லை. இதனால் ரயில்வேக்கான இழப்பு என்பது ரூ.1200 கோடியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் போராட்டம் தீவிரம்
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ரயில்வே பாதைகள் மற்றும் பிளாட்பாரங்களில், போராட்டக்காரர்களின் தர்ணா தொடர்கிறது.
எனவே, பாதுகாப்பு கருதி ரயில்களை இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஜந்தியாலா, நப்கா, தல்வாண்டி சாபோ மற்றும் பதிந்தா ஆகிய பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தம் 32 இடங்களில் போராட்டங்கள் தொடர்கின்றன.
இதன் காரணமாக, பஞ்சாப் மாநிலம் வழியே அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இன்று வரை 1,350 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது கொரோனா நேரத்தில் பயணிகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரக்குகள் ஏற்றப்பட்ட ரயில்கள் 15-20 நாட்களாக பல்வேறு இடங்களில் இடையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பலர் மாற்று போக்குவரத்து மூலம் சரக்கை கொண்டு செல்கின்றனர்.
பஞ்சாப்பிலிருந்து வெளி மாநிலங்களுக்கு உணவு தானியங்கள், கன்டெய்னர்கள், வாகனங்கள், சிமெண்ட், உரங்கள் ஆகியவற்றையும் அனுப்ப முடியவில்லை. அதேபோல், பஞ்சாப் மாநிலத்துக்குள்ளும் கன்டெய்னர், சிமென்ட், ஜிப்சம், உரங்கள் போன்ற பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. ரயில்கள் இயக்கத்தை மீண்டும் தொடர, பாதுகாப்பை உறுதி செய்யும்படி, பஞ்சாப் முதல்வருக்கு, ரயில்வே அமைச்சர் கடந்த அக்டோபர் 26ம் தேதி கடிதம் எழுதியுள்ளார் என்று மத்திய இரயில்வே அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க...
நீங்கள் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சியா? கிராம உதவியாளராகலாம் உங்களுக்கான வாய்ப்பு!!
சோளப் பயிர்களை தாக்கும் பச்சை வண்ண வெட்டுக்கிளிகள்! - திண்டுக்கல் விவசாயிகள் கவலை!
ரூ.50,000 செலவழித்தும் ரூ.5000க்கும் கூட வழியில்லை! - ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்!
Share your comments