தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.57.95 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், 4 சேமிப்பு கிடங்கு வளாகங்கள், 58 நேரடி நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.15.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 110 நபர்களுக்கு பணி நியமன மற்றும் பணி நிரந்தர ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார். இதுத்தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக்கூடம்:
விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியான நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றினை இயற்கைப் பேரிடர் மற்றும் மழைப் பொழிவுகளிலிருந்து பாதுகாப்பாக சேமித்து வைத்திடவும், அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களைச் சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அதிக அளவில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், கருமத்தம்பட்டியில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்திட 4 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம்; திண்டுக்கல், திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களில் 17 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நான்கு சேமிப்பு கிடங்கு வளாகங்கள்:
தென்காசி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மொத்தம் 36 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 58 நேரடி நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள்; என மொத்தம் 57 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 110 நபர்களுக்கு பணி நியமனம் மற்றும் பணி நிரந்தரம் தொடர்பான ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் அமைச்சர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, அர.சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உட்பட அரசுத்துறை செயலாளர்களும், உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
Read more:
உட்புற அறையில் குங்குமப்பூ சாகுபடி- லட்சங்களில் வருமானம் ஈட்டும் 64 வயது பெண்!
நெற்பயிருக்கான உரம் டூ கால்நடை தீவனம்: அசோலாவின் தன்மை என்ன?
Share your comments