இன்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அரசியல் கட்சி தலைவர்கள் பலர் மக்களுக்காக குரல் கொடுத்தனர். அவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடிய போது கூட்டத்தின் தொடக்கத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களையும் வணங்கி முதலமைச்சர் உரையை தொடங்கினார். தமிழகத்தின் 16வது சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்தார்.
ஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசின் கொள்கை திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை முன்னோட்டம்தான். பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழமொழி, நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம், துளி அளவும் சந்தேகம் வேண்டாம் என்று கூறினார்.
ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். ஊடகங்களில் திமுகவுக்கு வாக்களிக்க வில்லை என பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றன என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா நிவாரண நிதி ரூ.4000, வழங்குவதற்கான திட்டத்திற்காக கையெழுத்திட்டேன், இரண்டு தவணைகளாக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அனைத்து நகரப் பேருந்துகளிலும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மூன்றாம் பாலினத்தவருக்கு இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற நிலையில் ஆட்சிக்கு வந்தோம். தற்போது இல்லை இல்லை என்ற சூழலே இல்லாத சூழலை உருவாக்கியுள்ளோம்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது மக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன என்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளன. மேலும் மீத்தேன், நியூட்ரினோ மற்றும் எட்டுவழிச் சாலை எதிர்த்து அறவழியில் போராடிய போது தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் படிக்க:
நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட இலவச உணவு தானிய திட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்- கொள்முதல் பணி நிறுத்தம்!
நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட இலவச உணவு தானிய திட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
Share your comments