பிரதமர் மோடி பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தினை பார்வையிட சென்ற போது அவரால் ஒரு புலியையும் பார்க்க இயலவில்லை. இதற்கு அந்த சஃபாரி வாகன ஓட்டுனரை காரணம் என அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வனத்துறையினரோ பிரதமரின் பாதுகாப்பு குழுவால் தான் இப்பிரச்சினை ஏற்பட்டது என தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணி முதல் 9.30 மணி வரை பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் (பிடிஆர்) 22 கி.மீ சஃபாரியில் சென்றபோது ஒரு புலியை கூட அவரால் பார்க்க முடியவில்லை. பிரதமர் பயணித்த வாகனத்தை ஓட்டிச் சென்ற 29 வயதான ஓட்டுநர் மதுசூதனன் மீது குற்றம் சாட்டப்பட்டு, புலிகள் நடமாடும் வழியைத் தேர்வு செய்யாததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வாகனத்தின் பதிவு எண்ணை ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் பிரதமரின் சுற்றுப்பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு "பாதுகாப்பு நோக்கங்களுக்காக" அந்தப் பாதையில் சுற்றிக் கொண்டிருந்த பிரதமரின் பாதுகாப்பு குழுக்கள் பிரதமரின் பயணத்திற்கு முந்தைய ஐந்து நாட்களிலும் புலிகளைக் கண்டுபிடிக்க முடிந்தது என்று மூத்த BTR அதிகாரி முன்னணி நாளிதழிடம் உறுதிப்படுத்தினார். ஆனால் பிரதமரால் சில புலிகளின் காலடித்தடத்தினை மட்டுமே பார்க்க முடிந்தது, எந்த புலியும் தென்படவில்லை.
பாதுகாப்பைக் காரணம் காட்டி, பிரதமரின் சஃபாரி வாகனம் கான்வாய்க்கு நடுவில் இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் விரும்பினர். முன்னணி வாகனத்தில் இருந்தால் விலங்குகளை பார்வையிட சிறந்ததாக இருக்கும் என்று நாங்கள் அவர்களிடம் மன்றாட வேண்டியிருந்தது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை சரிபார்க்க, பாதுகாப்பு குழுவினர் கூடுதல் சஃபாரியுடன் சுற்றினர். பின்னர் தான் பாதுகாப்பு குழுவினர் பிரதமர் முன் வாகனத்தில் அமர தீர்மானித்தார்கள்.
பிரதமர் மோடியால் குறைந்தபட்சம் 40 யானைகள், 20-30 கவுர்கள், சுமார் 30 சாம்பார் மான்கள் மற்றும் பிற வனவிலங்குகள் கொண்ட கூட்டத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. அதுவும் சனிக்கிழமை எந்த வாகனமும் அப்பகுதியில் செல்லாமல் இருந்த காரணத்தினால் தான்.
சஃபாரிக்குப் பிறகு, பி.டி.ஆர் அதிகாரிகளிடம் ஒரு புலியை கூட காணவில்லை என்று பிரதமர் பணிவுடன் புகார் செய்தார். BTR இயக்குனர் ரமேஷ் குமார் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “ வாகனத்தின் எண் ரத்து செய்யப்பட்டது என்கிற பதிவு தவறானது. புழக்கத்தில் இருக்கும் வாகன எண் பழையது. வாகனம் பயன்பாட்டில் இல்லை. வாகன ஓட்டுனர் மதுசூதனன் மீதும் தவறில்லை. உயர் பாதுகாப்பு என்ற பெயரில், வாகனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் மீண்டும் மீண்டும் சென்று, பார்வைக்கு இடையூறாக இருந்துள்ளன.
வாகன ஓட்டுனர் மதுசூதன் தெரிவிக்கையில் “காடுகளில் விலங்குகளை பார்ப்பது வெறும் அதிர்ஷ்டம். நான் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பாதுகாப்புக் குழுக்களுக்கு சோதனை ஓட்டம் செய்த போது, இரண்டு புலிகள் தென்பட்டன. உண்மையில், பிரதமர் புலியின் காலடி தடங்களைப் பார்த்தார், ஆனால் புலியைத் தான் அவரால் பார்க்க இயலவில்லை. எனது மேலதிகாரி சொன்ன வழியில் நான் சென்றேன். பிரதமரிடம் பேசக்கூட முடியாத அளவுக்கு பயந்தேன். எனது முழு கவனமும் கவனமும் அவருடைய பாதுகாப்பில் இருந்தது என குறிப்பிட்டுள்ளார்."
மேலும் காண்க:
புலிகளின் எண்ணிக்கையில் அடிவாங்கிய மேற்கு தொடர்ச்சி மலை- வனத்துறையினர் குழப்பம்
Share your comments