தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த சில புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பின் 2-வது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது, இதனால் நாள்தோறும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர், குறிப்பாக இளைஞர்கள் பலர் இந்த கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழகத்தில் வரும் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டதால் முழு ஊரடங்கைக் கடுமையாக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு
இதன்படி நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. .அதன்படி 12 மணி வரை செயல்பட்டு வந்த காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகளுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்படவே அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளுக்கான தடை உத்தரவு அப்படியே தொடரும். மேலும் தேனீர் கடைகளுக்கு அனுமதி இல்லை.
31,892 பேருக்குப் புதிதாக கொரோனா
இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் புதிதாக 31,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13, லட்சத்து 18 ஆயிரத்து 982 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்குப் பலியானோர் எண்ணிக்கை17 ஆயிரத்து 056 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 6538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
13 பொருட்களுடன் கூடிய கொரோனா நிவாரணத் தொகுப்பு- ஜூன் 3ம் தேதி முதல் விநியோகம்!
அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்
Share your comments