1. செய்திகள்

மழை இல்லாததால் நீர்வரத்து சரிவு: பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு

Harishanker R P
Harishanker R P

Pic credit: Dinakaran

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 152 அடி உயரமுள்ள முல்லை பெரியாறு அணை தேனி மாவட்ட பாசன, குடிநீர் தேவைக்கும், வைகை அணைக்கும் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்த அணையால் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் பயனடைகின்றனர். கடந்த ஜூன் 1ம் தேதி அணையின் நீர்மட்டம் 130 அடியை கடந்த நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காக வினாடிக்கு 1,200 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

பின்னர் நீர்பிடிப்புப் பகுதிகளில் ஓரளவு மழை பெய்ததால் நீர்வரத்து மீண்டும் அதிகரித்ததால் நீர்திறப்பு விநாடிக்கு 1,600 கன அடியாகவும், பின்னர், 1,800 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. கடந்த 18ம் தேதி நீர்வரத்து 5,323 கன அடிவரை அதிகரித்தது. ஆனால் இதன் பிறகு நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாகக் குறைந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,252.36 கன அடியாக மேலும் குறைந்தது. இதையடுத்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறப்பு 689 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 132.35 அடியாக உள்ளது. மொத்த நீர் இருப்பு 5,246 மில்லியன் கன அடி.

நேற்று அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் லோயர் கேம்ப் நீர் மின் உற்பத்தி நிலையத்தில் அதிகபட்ச மின் உற்பத்தி அளவான 168 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெற்ற நிலையில், இன்று காலை முதல் நீர் திறப்பு குறைக்கப்பட்டதன் எதிரொலியாக மின் உற்பத்தி 62 மெகா வாட்டாக குறைந்துள்ளது. தேனி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்: ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 63.27 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 1,404 கனஅடி. நீர்வெளியேற்றம் வினாடிக்கு 969 கனஅடி. மொத்த நீர் இருப்பு 4,259 மில்லியன் கனஅடி.

தேவதானப்பட்டி அருகே, 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடி. நீர்வரத்து இல்லை. நீர்வெளியேற்றம் இல்லை. நீர் இருப்பு 199.25 மில்லியன் கனஅடி. பெரியகுளம் அருகே, 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.68 அடி. நீர்வரத்து இல்லை. நீர்வெளியேற்றம் 3 கனஅடி. நீர் இருப்பு 39.67 மில்லியன் கனஅடி.உத்தமபாளையம் அருகே, 52.55 அடி உயரமுள்ள சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 46.60 அடி. நீர்வரத்து 3 கனஅடி. நீர்வெளியேற்றம் இல்லை. நீர் இருப்பு 61.27 மில்லியன் கனஅடி.

English Summary: Mullaiperiyar dam

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.