சுதந்திர தின விழாவில் விருது தொகை 10 லட்சம் ரூபாயை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மூத்த தலைவர் நல்லகண்ணு அரசுக்கே வழங்கிய சம்பவம், மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது.இந்த விருது 75-வது சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலக்கணமாகத் திகழ்ந்தவர்
இளம் வயதில் இருந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்று தனது 80 ஆண்டு கால பொது வாழ்வில் 7 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து தன் வாழ்வையே ஏழை, எளியோருக்காகவும், விளிம்பு நிலை மக்களுக்காகவும் அர்ப்பணித்து தகைசால் என்ற சொல்லுக்கு இலக்கணமாக விளங்கி வருவதையொட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
சுதந்திர தின விழா
சென்னையில் இன்று நடந்த சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்.நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதுடன், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி சிறப்பித்தார்.
திருப்பி வழங்கினார்
அதை பெற்றுக்கொண்ட ஆர்.நல்லகண்ணு உடனடியாக ரூ.10 லட்சம் காசோலை மற்றும் தனது சொந்த நிதி ரூ. 5 ஆயிரத்துடன் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
பெருந்தன்மை
அதனை அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுவின் பெருந்தன்மையை பாராட்டி நன்றி தெரிவித்தார்.பரிசாகக் கிடைத்தத் தொகையைக் கொண்டு, என்னென்ன செலவு செய்யலாம் என எண்ணுபவர்களுக்கு மத்தியில், நல்லக்கண்ணுவின் பெருந்தன்மை, என்றும் பாராட்டுதற்குரியதே.
மேலும் படிக்க...
Share your comments