அரசு மேல்நிலைப்பள்ளியில், இயற்கை முறையில் காய்கறி பயிரிடும் தோட்டம் (Organic Vegetable garden) அமைத்துள்ளனர். முன் உதாரண நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள இந்த தோட்டம், கிராமத்தினரின் பாராட்டை பெற்றுள்ளது.
காய்கறித் தோட்டம்:
அன்னுார் அடுத்த சொக்கம்பாளையத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கான ஐந்து அரசு விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதி மற்றும் இப்பகுதி மாணவ, மாணவியர் 470 பேர் சொக்கம்பாளையம், காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். இப்பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 90 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. இப்பள்ளியில் ரசாயனம் கலக்காத, இயற்கை முறையிலான காய்கறி தோட்டம் (Vegetable Garden) அனைவரையும் அசத்துகிறது. இங்கு, 25 சென்ட் இடத்தில், இயற்கை முறையில், வெண்டை, கத்தரி, மிளகாய், தக்காளி (Tomato), கீரை, முருங்கை (Drum stick), கருவேப்பிலை, முள்ளங்கி ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன.
இயற்கை உரம்:
வேப்பம்புண்ணாக்கு உள்ளிட்ட இயற்கை இடுபொருட்கள் (Organic Inputs) மட்டுமே பயன்படுத்தி தோட்டத்தை பராமரிக்கின்றனர். தற்போது பள்ளி செயல்படாவிட்டாலும், தோட்டத்தில் விளையும் காய்கறிகளை அப்பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார் மற்றும் சத்துணவு அமைப்பாளர் மருதன் கூறுகையில், கடந்த மார்ச் வரை பள்ளி செயல்பட்டபோது சத்துணவு சாப்பிட்ட 150 மாணவர்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளும் இந்த தோட்டத்தில் இருந்தே பெறப்பட்டன. மீண்டும் பள்ளி துவங்க வாய்ப்புள்ளதால், காய்கறி தோட்டத்தை நல்ல முறையில் பராமரித்து வருகிறோம், என்றனர்.
காய்கறி தோட்டம் நன்கு பராமரிக்கப்படுவதற்கு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளியில் இயற்கை முறையில் உருவான காய்கறித் தோட்டம், மற்ற பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் அளிக்கும். மேலும், இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வும் மாணவப் பருவத்திலேயே உண்டாகும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கல்லூரியில் காய்கறித் தோட்டத்தோடு, மாணவர்களுக்கு இயற்கை விவசாய விழிப்புணர்வை ஊட்டும் தாளாளர்!
விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
Share your comments