தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கை பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே. தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இழப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. எனவே பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை ரத்து செய்யக் கோரி ’CPS ஒழிப்பு இயக்கம்’ என்ற பெயரில் அரசு ஊழியர்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பென்சன் திட்டம் (Pension Scheme)
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் இதில் அங்கமாக உள்ளனர். இவர்களின் முக்கிய நோக்கமே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதுதான். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் இப்போது ஒவ்வொன்றாக பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. பீகார், ஜார்கண்ட் மாநிலங்களிலும் தற்போது அமல்படுத்தப்படுகிறது.
அப்படி இருக்கையில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தமிழ்நாட்டில் மட்டும் இத்திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது ஏன் என்றும், ஏன் இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மௌனம் காக்கிறார் எனவும் அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்ததால் தான் கடந்த தேர்தலில் பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளித்தனர். ஆட்சிக்கு வந்தவுடன் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏதேதோ காரணம் கூறி இத்திட்டத்தை அமல்படுத்த தமிழக முதல்வரும், நிதியமைச்சரும் மறுப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.
போராட்டம் (Protest)
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று மே 1ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவித்திருந்தனர். அதன்படி 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், திமுகவின் தேர்தல் கால வாக்குறுதிப்படி CPS திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், ஓய்வு பெறும் CPS ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க கோரியும் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 7ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் பல்வேறு மாவட்ட & வட்ட தலைநகரங்களில் நடத்தப்படுகிறது.
CPS திட்டத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முறையீடு அளிக்கப்படும் எனவும், CPS ஒழிப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தானாய் எதுவும் மாறாது எனவும், போராடித்தான் நாம் மாற்ற வேண்டும் எனவும் இவர்கள் முழக்கமிடுகின்றனர். CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக இப்போராட்டத்தில் கலந்துகொள்ள அரசு ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
அக்னிபாத் திட்டம்: 2.72 இலட்சம் பேர் பதிவு!
பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு நவீன கருவி: கோவை இரயில் நிலையத்தில் அறிமுகம்!
Share your comments