டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் (Gold) வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் (First Gold) கிடைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா 23, பங்கேற்றார். இறுதி ஆட்டத்தில் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், ஜெர்மனியின் ஜூலியர் வெபர், ஜோகனஸ் வெட்டர் உட்பட 12 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரருக்கும் தலா 6 வாய்ப்பு வழங்கப்பட்டன. முதல் வாய்ப்பில் 87.03 மீ., துாரம் எறிந்த நீரஜ், 2வது வாய்ப்பில் அதிகபட்சமாக 87.58 மீ., துாரம் எறிந்து முதலிடத்தை கைப்பற்றி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். தவிர, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். இம்முறை இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்துள்ளன.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
வரலாறு காணாத வெற்றியை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். உங்களின் தங்கம், தடைகளை உடைத்து வரலாற்றை உருவாக்கி உள்ளது. உங்களின் முதல் ஒலிம்பிக்கில், முதல் தங்கத்தை கொண்டு வந்துள்ளீர்கள். உங்களின் சாதனை, நமது இளைஞர்களை ஊக்குவிக்கும். இந்தியா மகிழ்ச்சியடைகிறது. மனமார்ந்த பாராட்டுகள்.
41 ஆண்டுகளுக்குப் பின் ஹாக்கியில் பதக்கம்! இந்திய ஆடவர் அணி அசத்தல்!
பிரதமர் மோடி
டோக்கியோவில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ரா இன்று என்ன சாதனை படைத்தாரோ அது என்றும் நினைவில் வைக்கப்படும். இளைஞர் நீரஜ் சோப்ரா சிறப்பான செயல்பட்டார். அவர் ஆர்வத்துடன் விளையாடி, இணையற்ற திறமையை வெளிப்படுத்தினார். தங்கம் வென்ற வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
ரூ. 6 கோடி பரிசு
தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு நாடு முழுவதும் பாராட்டு குவிகிறது. அவருக்கு ரூ. 6 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது.
வெண்கல பதக்கம்
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் 65 கிலோ ஆடவர் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார். வெண்கல பதக்கத்துக்கான ‛ரெப்பிசேஜ்' போட்டியில், பஜ்ரங் புனியா, கஜகஸ்தானின் டவுலெட் நியாஸ் பேகோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில், புனியா 8 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் படிக்க
Share your comments