கச்சிராயபாளையம் ஊரக பகுதிகளில் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் கைவிடப்பட்ட இயற்கை உரம் தயாரிக்கும் திட்டத்தை முறையாக நடைமுறைபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம்
கிராமப் புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மற்றும் சிறப்பு திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் துாய்மை இந்தியா மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் எடுத்த வாய்நத்தம், மண்மலை உள்ளிட்ட ஊராட்சிகளில் மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம் கடந்த 2017 -18ம் ஆண்டுகளில் துவங்கியது.
அதன்படி கிராமங்களில் பணிபுரியும் துாய்மைக் காவலர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளிலிருந்து, இயற்கை உரம் (Natural Fertilizer) தயாரிக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உரங்கள் விற்பனை செய்வதின் மூலம் கிடைக்கும் வருவாயை ஊராட்சி நிதியில் சேர்க்கவும் அரசு உத்தரவிட்டது. இதற்காக பல ஆயிரம் ரூபாய் செலவில் 8 தொட்டிகள் கொண்ட இயற்கை உரகுடில் கிராமப் புறங்களில் அமைக்கப்பட்டன.
காற்று மாசு
உரம் தயாரித்தல் மற்றும் உரகுடில் பராமரிப்பிற்கும் என்.ஆர்.ஜி., திட்டத்தின் கீழ் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் இத்திட்டம் கச்சிராயபாளையம் பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களில் முறையாக நடைபெறவில்லை. குறிப்பாக இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் தற்போது எந்த ஊராட்சிகளிலும் நடைபெறுவதில்லை.
இதனால் கிராமப் புறங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்காமல் ஆங்காங்கே பொது இடங்களிலும் குடியிருப்பு பகுதி அருகிலேயும் குவித்து தீயிட்டு கொளுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் புகையால் காற்று மாசடைவதுடன் (Air Pollution) சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகிறது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் கிராமப் புறங்களில் சுகாதாரம் மேம்படும் என்ற நிலை மாறி மாறாக சுகாதார சீர்கேடுகள் அதிகமாகும் அவலம் ஏற்படுகிறது.சில இடங்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டமும் முறையாக செயல்படாமல் உள்ளதால் பொது இடங்கள், குழந்தைகள் நல மையங்கள், பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் குவிந்து பயங்கர துர்நாற்றம் வீசி வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை
மேலும் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் முறையாக செயல்படாததால் உர குடில்கள் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. இதனால் அரசு பணம் விரயமாவதுடன், உரக்குடில்கள் சாராயம் விற்கும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் கைவிடப்பட்ட இயற்கை உரம் தயாரிக்கும் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க
அற்புதப் பயன்களை அள்ளித்தரும் தேயிலை மர எண்ணெய்!
கொய்யாப்பழத்தில் விதைகளை குறைத்து தரத்தை உயர்த்தும் வழி!
Share your comments