Heavy Rain Warning For 10 Districts in TN
ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக பெருந்துறை மற்றும் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் தலா 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை குறித்த அறிவிப்பினை சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
26.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28.09.2023 முதல் 30.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
01.10.2023 மற்றும் 02.10.2023; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை;
தமிழக கடலோரப்பகுதிகள்: (29.09.2023 மற்றும் 30.09.2023) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: (26.09.2023 மற்றும் 27,09.2023) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
மேலும் காண்க:
குறுவை நெல் விவசாயி மரணத்திற்கு திமுக தான் பொறுப்பு- EPS கண்டன அறிக்கை
Share your comments