கிராம வரைபடங்களை (Village Map), ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி பெறுவதற்கான புதிய வசதியை, நில அளவை துறை துவக்கி உள்ளது. தமிழகத்தில் நிலம் வாங்குவோர், அது தொடர்பான உண்மை நிலவரங்களை அறிய, பட்டா, நில அளவை வரைபடம் போன்ற ஆவணங்களை ஆய்வு செய்வது அவசியம்.
கணினியில் பதிவேற்றம்
இந்நிலையில், சர்வே எண் (Survey Number) வாயிலாக நில அளவை வரைபடங்களை பெறுவதும், குறிப்பிட்ட சர்வே எண், சம்பந்தப்பட்ட கிராமத்தில் எங்கு அமைந்துள்ளது என்பதை அறிவதும் சிரமமாக உள்ளது. இதற்கு நில அளவை துறையை அணுகி, கிராம வரைபடங்களை பெற வேண்டும். இதற்காக நில அளவை துறை, 16 ஆயிரத்து 721 கிராமங்களின் வரைபடங்களை தயாரித்து உள்ளது. வரைபடங்கள் அனைத்தும், டிஜிட்டல் முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கிராம வரைபடங்களுக்காக, நில அளவை துறை அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே பெறும் புதிய சேவையை நில அளவைத் துறை துவக்கி உள்ளது.
நில அளவை துறையின், https://tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தில், இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்தால், சம்பந்தப்பட்ட கிராம வரைபடம் தொடர்பான விபரங்கள் வரும். இங்கு விண்ணப்பதாரர் தங்கள் பெயர், முகவரி, அடையாள ஆவண விபரம் போன்றவற்றை கொடுக்க வேண்டும். இதன்பின், ஆன்லைன் முறையில் கட்டணம் (Online Fees) செலுத்த வேண்டும். ஒரு வரைபடத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக, 200 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பிரச்னை
கட்டணம் செலுத்தியவுடன் கிராம வரைபடங்களை, உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு நபர் ஒரு மாதத்தில், 10 வரைபடங்களை மட்டுமே பெற முடியும். அதேநேரத்தில், புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த சேவையில் கட்டணம் செலுத்துவதில், சில தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. இந்த புகார்களை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நில அளவை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் படிக்க
விதிகளைப் பின்பற்றாத 101 உரக்கடைகள்: தமிழக வேளாண்மைத் துறை எச்சரிக்கை!
இந்திய விமானப்படை தினம்: வீரர்கள் சாகசம்!
Share your comments