பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்கள் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி பேருந்தில் பெண்களைக் கேலி செய்தல், முறைத்து பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக சைகைகள் செய்தல், பாட்டு பாடுதல், வசைச் சொற்கள் பேசுதல், புகைப்படம் - வீடியோ எடுத்தல் போன்றவற்றை செய்பவர்கள் நடத்துநர் எச்சரித்தும் கேட்கவில்லையென்றால் உடனடியாக பேருந்திலிருந்து இறக்கிவிடவோ, அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்று புகார் தெரிவிக்கவோ நடத்துநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதே போல நடத்துநர்களும் பெண்களிடம் சரியாக நடந்துகொள்ளவேண்டும் எனவும், பெண்கள் சிறுமிகளிடம் அசௌகரியமான முறையில் நடந்துகொள்வதோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணம் குறித்த பொருத்தமற்ற கேள்விகளை கேட்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நடத்துநர்கள் மீது புகார்கள் தெரிவிக்க ஒரு புகார் புத்தகமும் ஒவ்வொரு பேருந்திலும் பரமாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுக்க உள்ள முக்கிய நகரங்களில் நியூஸ் 18 சார்பில் பயணிகளிடம் இது குறித்து கேட்கப்பட்டது. மதுரையில் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் “இந்த நடவடிக்கை மிக முக்கியமான ஒன்று. பெண்களின் பாதுகாப்புதான் முதன்மையானது.” எனத் தெரிவித்தார்.
மற்றொரு பெண் பயணி “முன்பெல்லாம் பேருந்தில் பயணம் செய்யும்போது கொஞ்சம் பயம் இருக்கும். இனி எந்த பதற்றமும் பயமும் இல்லாமல் நிம்மதியாகப் பயணம் செய்ய முடியும்.” எனத் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள ஒரு பேருந்து நடத்துநரிடம் இது குறித்து கேட்டபோது “பெண்களை கிண்டல் செய்பவர்களை முன்பு எச்சரித்து வந்தோம். தற்போது அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். பொதுவாக பெண்களுக்கு தொடர்ந்து நிறைய விதமான தொந்தரவுகளை கொடுப்பவர்கள் பேருந்துகளில் பயணம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
Share your comments