மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஸ்வராஜ் டிராக்டர்ஸ், இந்திய விவசாயிகள் அறுவடை பணிகளை எளிதாகவும், திறம்படவும் மேற்கொள்ளும் பொருட்டு சமீபத்தில் ஸ்வராஜ் 8200 ஸ்மார்ட் ஹார்வெஸ்டரை (அறுவடை எந்திரம்) சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. காரீஃப் பருவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அறுவடை இயந்திரம் நெல் மற்றும் சோயா பீன் போன்ற பயிர்களை அறுவடை செய்வதில் சிறந்த முடிவுகளை அளித்தது.
விவசாயிகளின் நம்பிக்கையை பெற்ற நிலையில், வரவிருக்கும் ராபி பருவத்திலும் இந்த அறுவடை இயந்திரத்தின் தேவை அதிகரிக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் பிதாம்பூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய உற்பத்தி ஆலையில் ஸ்வராஜ் 8200 ஸ்மார்ட் ஹார்வெஸ்டரின் உற்பத்தியை அதிகரிக்கும் பணியை தொடங்கியுள்ளது மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனம்.
ஸ்வராஜ் 8200 ஸ்மார்ட் ஹார்வெஸ்டர் என்பது மொஹாலியில் உள்ள ஸ்வராஜின் ஆர்&டி வசதியில் பல வருட தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக உதயமான அறுவடை இயந்திரம் ஆகும். ஐரோப்பாவில் பின்லாந்தில் உள்ள மஹிந்திரா & மஹிந்திராவின் ஹார்வெஸ்டர் ஆர்&டி-யும் எந்திரத்தின் தன்மை மற்றும் செயல்பாடுகளை நிர்ணயிப்பதில் உதவிக்கரமாக இருந்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் எதிர்வரும் காலத்தில் ஸ்வராஜ் 8200 ஸ்மார்ட் ஹார்வெஸ்டர் அறுவடை எந்திரத்தின் தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, பிதாம்பூரில் ஒரு பிரத்யேக அறுவடை இயந்திரம் உற்பத்தி ஆலையை உருவாக்கியுள்ளது. இந்த ஆலையில் எந்திரத்திற்கான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான அதிநவீன இயந்திரங்கள், நவீன பெயிண்ட் வசதி, பிரத்யேக அசெம்பிளி லைன்கள் மற்றும் சோதனை வசதிகளும் உள்ளன.
புதிய ஸ்வராஜ் 8200 ஸ்மார்ட் ஹார்வெஸ்டர் இயந்திரத்தின் சிறப்பம்சம்:
அறுவடை செய்யப்பட்ட ஏக்கர், நேரடி இருப்பிட கண்காணிப்பு, பயணித்த சாலை கிலோமீட்டர்கள் மற்றும் எரிபொருள் நுகர்வு பற்றிய நிகழ்நேர தகவல்களை வழங்குதல் போன்ற வசதிகளை ஸ்வராஜ் 8200 ஸ்மார்ட் ஹார்வெஸ்டர் இயந்திரம் உள்ளடக்கியுள்ளது.
பவர் மற்றும் நம்பகத்தன்மையில் மஹிந்திரா பிராண்டின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், புதிய ஸ்வராஜ் 8200 ஸ்மார்ட் ஹார்வெஸ்டர் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட இயந்திரத்தால் இயக்கப்படுகிறது. இது சிறந்த-இன்-கிளாஸ் எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த BS IV உமிழ்வு தரநிலைகளை கொண்டுள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் பண்ணை இயந்திரங்களின் மூத்த துணைத் தலைவர் & வர்த்தகத் தலைவர் கைராஸ் வகாரியா இதுக்குறித்து தெரிவிக்கையில், “இந்தியாவில் அறுவடை தொழில்நுட்பத்தில் ஸ்வராஜ் முன்னோடியாக இருந்து வருகிறது, மேலும் புதிய 8200 ஸ்மார்ட் ஹார்வெஸ்டர் ஒரு புதிய தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் புத்திசாலித்தனமான அறுவடை முறையின் மூலம், வாடிக்கையாளர்கள் பலனடைவார்கள் என நம்பிக்கையோடு இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்வராஜ் டிராக்டர்ஸ் 15HP முதல் 65HP வரையிலான டிராக்டர்களை உற்பத்தி செய்கிறது. முழுமையான விவசாய தீர்வுகளை வழங்கி வருவதோடு, தோட்டக்கலை இயந்திரமயமாக்கலில் முன்னோடியாகவும் ஸ்வராஜ் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
Read more:
கடைசி நேரத்தில் மீண்டும் ஒரு சான்ஸ் - ஆதார் இலவச அப்டேட் அறிவிப்பு
ரூ.15,000 மானியத்துடன் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார்- அப்ளை பண்ணியாச்சா?
Share your comments