தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் தற்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுத்தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று 7 மணி வரையிலான வானிலை அறிக்கை தொடர்பாக வெளியிட்டுள்ள குறிப்பில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை தமிழகத்தில் மழை எங்கும் பதிவாகாத நிலையில், ஈரோட்டில் அதிகப்பட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (31.03.2024) : தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
01.04.2024 மற்றும் 02.04.2024: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 03.04.2024: தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
04.04.2024 முதல் 06.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
31.03.2024 முதல் 04.04.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காண சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
Read more:
Share your comments