
நீலகிரி விவசாயிகள் படிப்படியாக 'அங்கக' வேளாண்மை முறையினை கடைபிடித்து, நஞ்சில்லா உணவு பொருட்களை விளைவித்து, இயற்கை வளங்களை பாதுகாக்க முன்வர வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில், மாவட்டம் நிர்வாகம் 'அங்கக' வேளாண்மை எனப்படும் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது.
தோட்டக்கலை துறையினர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, மாவட்டம் முழுவதும், பல சிறு விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், மாவட்டத்தில் இயற்கை வளங்களான மண், நீர் மற்றும் காற்று மாசுபடாமல் நஞ்சில்லா உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதை உறுதி செய்ய முடியும்.
இதனை ஊக்குவிக்க, நீலமலை அங்கக வேளாண்மை திட்டத்திற்கு அரசின் சார்பில், 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதுவரை, 1,311 விவசாயிகள் பயன்
முதற் கட்டமாக மாவட்டத்துக்கு, 2.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், காய்கறி, வாசனை திரவிய பயிர், பழ வகைகள், சிறுதானிய பயிர், உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மண் வளத்தை மேம்படுத்த மண்புழு உரம் வினியோகம், பசுந்தாள் உர விதைகள் வினியோகம், விதை மற்றும் நடவு பொருட்களுக்கான மானியம், பூச்சிகளை கட்டுப்படுத்த தேவையான இடுப்பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட முழுவதும், 1,311 விவசாயிகள் இதுவரை பயனடைந்துள்ளனர். நடப்பாண்டில் மட்டும், 2,100 சிறு விவசாயிகளை இத்திட்டத்தில் பயனடைய செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், காய்கறி சாகுபடியை, 1,750 ஏக்கர் பரப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில், ஊட்டி வட்டாரத்தில், நஞ்நாடு, இத்தலார், கக்குச்சி கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், 860 ஏக்கர் பரப்பில் காய்கறி சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குன்னுார், கேத்தி, கூடலுார், ஸ்ரீ மதுரை, செரு முள்ளி பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,'' இந்த திட்டத்தில், நடப்பாண்டு விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை குறித்த விரிவான தொழில்நுட்ப பயிற்சி, வேளாண்மை அறிவியல் நிலையம் மூலமாக வழங்கப்பட உள்ளது.
தேவையான இயற்கை இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி விவசாயிகள் படிப்படியாக அங்கக வேளாண்மை முறையினை கடைப்பிடித்து, நஞ்சில்லா உணவுப் பொருட்களை விளைவித்து நீலகிரியின் இயற்கை வளங்களை பாதுகாக்க முன்வர வேண்டும்,'' என்றார்.
Read more:
வேளாண் நிதிநிலை அறிக்கை 2025 : 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர்கள் கருத்துக்களை கேட்டறிந்தனர்
Share your comments