1. செய்திகள்

வேளாண் நிதிநிலை அறிக்கை 2025 : 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர்கள் கருத்துக்களை கேட்டறிந்தனர்

Harishanker R P
Harishanker R P
TN Ministers and officials at a Review meeting (Pic credit: MRK Panneerselvam X handle)

வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக சேலம், கோவை, கிருஷ்ணகிரி, நாமக்கல், உள்ளிட்ட 9 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி , சுற்றுலா துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியதாவது :

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு,திருப்பூர்,கோயம்புத்தூர்,நாமக்கல்,நீலகிரி,கள்ளக்குறிச்சி, ஆகிய பல்வேறு மாவட்ட விவசாயிகளிடம் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த 4 வேளாண் நிதிநிலை அறிக்கைகளும் விவசாயிகளிடம் நேரடியாக அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த பிறகே தாக்கல் செய்யப்பட்டன. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டிய பொருள்களாக மாற்றி லாபகரமான முறையில் சந்தைப்படுத்துவதற்கு தேவையான அணைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறினார். அதோடு  இதற்காக விவசாயிகளுக்கு இயந்திரமயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றார்.

மேலும் மழை, வெள்ளம், வறட்சி, உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஈடுசெய்யும் வகையில் அரசால் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்றரை ஆண்டுகளில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 5,545 கோடி நிவாரண உதவித்தொகையை எவ்வித நிலுவையும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விளையும் சிறப்பு வாய்ந்த 30 பொருள்களுக்கு புவிசார் குறியீடுகள் பெறப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்ச்செல்வம் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் வி. தட்சிணாமூர்த்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையாளர் டி.ஆர். பிரகாசம், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

2025- 2026 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜட்டில் சுமார் 42,281 கோடி ரூபாயை இந்த துறைக்காக தமிழக அரசு ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் 2 லட்சம் ஏக்கர் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

Read more: 

உயிர்ம வேளாண்மை உற்பத்தியாளர் ஆக விரும்புவோருக்கு சிறப்பு பயிற்சி

இயற்கை வேளாண்மை, மாடி தோட்டம் குறித்த பயிற்சி : வேளாண் பல்கலை அழைப்பு!

English Summary: TN Ministers holds meeting with farmers ahead of 2025 Agriculture budget Published on: 27 February 2025, 01:48 IST

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub