தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்றும் , புயல் கரையை கடந்த பிறகும் அதன் தாக்கம் 6 மணி நேரம் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்கோது அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. மணிக்கு 11 கி.மீ வேகத்தில் வந்த நிவர் புயல் இப்போது 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயலின் வெளிசுற்று கடலூர் கரையை தொட்டு நகருக்குள் புக வேகம் எடுத்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.
புயலின் மையப்பகுதியான கண் பகுதி கரையை தொட இரவு 10 முதல் 11 மணியாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிவர் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்
இதனிடையே புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
புயலுக்கு பிந்தையை நடவடிக்கைகள்
தீவிர புயல் கரையை கடந்த பிறகு அடுத்த 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து புயலாகவும் அதற்கு அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் காரணமாக உள் மாவட்டங்களில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும் ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சூறாவளி காற்று மணிக்கு 65 இல் இருந்து 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
26ஆம் தேதி பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வேலூர் , ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Share your comments