பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்று வரும் நிலையில், ஹரியானா மாநிலத்தில் தகுதியற்ற பயனாளிகள் சுமார் 42 கோடி மதிப்பிலான பலன்களைப் பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவலை CAG வெளியிட்டுள்ளது.
பிஎம் கிசான் திட்டம்:
இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (பி.எம் கிசான் சம்மான் நிதி) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 10.09 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர். விவசாயிகளுக்கு பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.
CAG அறிக்கை:
மார்ச் 22 அன்று ஹரியானா விதான் சபாவில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில், வருமான வரி செலுத்துவோர், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவோர், இறந்த விவசாயிகள் மற்றும் சொந்த நிலம் இல்லாதவர்கள் என பிரதான் மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ரூ.42 கோடிக்கு மேல் பலன்களைப் பெற்றுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரியானாவின் 22 மாவட்டங்கள், 140 தாலுகாக்கள் மற்றும் 7,356 கிராமங்களில் இருந்து தணிக்கைக்காக தற்செயலாக ஏழு மாவட்டங்கள், 14 தாலுக்காக்கள் (ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்திலிருந்தும் இரண்டு தாலுகா வீதம்), மற்றும் 84 கிராமங்கள் (ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட தாலுகாவிலிருந்தும் ஆறு கிராமங்கள்) தேர்வு செய்யப்பட்டன. இந்த தணிக்கையானது 2021 இல் மேற்கொள்ளப்பட்டது.
சிஏஜி அறிக்கையின்படி, பிஎம்-கிசான் திட்டத்தில் தவறான அடையாளங்களை சரிபார்க்கப்படாதது மற்றும் பிஎம்-கிசான் பெறுவதற்கான இடைவெளியை கண்காணிக்க தவறியது, மாநில அரசில் குழு C மற்றும் அதற்கு மேல் பிரிவில் பணியாற்றி ஓய்வூதியம் பெற்றவர்கள் என மொத்தம் ரூ.1.31 கோடி இவர்களது கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பணத்தை மீட்டெடுக்க தணிக்கைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
ஜூன் 1, 2021 நிலவரப்படி, தகுதியற்ற 3,131 விவசாயிகள் தலா ரூ. 2,000 வீதம் மொத்தம் ரூ. 3.36 கோடி பெற்றுள்ளனர் என்று தணிக்கை கண்டறிந்துள்ளது. இவர்களில் 51 விவசாயிகள் மட்டுமே மொத்தம் ரூ.4.14 லட்சத்தை திருப்பி அளித்துள்ளனர். இதேபோல், இந்தத் திட்டத்தின் கீழ் 38,109 வருமான வரி செலுத்துவோர் மொத்தம் ரூ.37.34 கோடி பெற்றுள்ளனர்.
அறிக்கையின்படி, டிசம்பர் 15, 2021 தேதியிட்ட பதிலில், தகுதியற்ற 246 பயனாளிகளிடமிருந்து ரூ.23.94 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 1,455 வருமான வரி செலுத்தும் பயனாளிகளிடமிருந்து ரூ.138.02 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் துறை சுட்டிக்காட்டியுள்ளது.
விதிமுறைகளை மீறி 39 பயனாளிகள் தங்கள் மனைவி/மைனர் குழந்தைகளுடன் சேர்த்து ரூ.4.48 லட்சம் பலன்களைப் பெற்றுள்ளனர். தணிக்கையில் இறந்த பயனாளிகள் 66 பேரின் வங்கிக்கணக்கிலும், சொந்த நிலம் இல்லாத 19 பயனாளிகளும் என ரூ.2.82 லட்சம் பலன்களைப் பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
பிஎம் கிசான்- உங்களது விவரங்களை ஆன்லைனில் திருத்த 6 STEPS போதுமா?
Share your comments