வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று 21 அக்டோபர் 2023 துவங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தருவது வட கிழக்கு பருவமழை தான் என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு அனைத்து மாவட்டங்களில் பரவலாக மழையினை எதிர்ப்பார்க்கலாம்.
நேற்று காலை (20-10-2023) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை (21-10-2023) 08:30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது (22-10-2023) வாக்கில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
உருவாகியது தேஜ் புயல்:
அதைப்போல் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் நேற்று அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ”தேஜ்” புயலாக வலுப்பெற்று தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த மூன்று நான்கு தினங்களில் மிக தீவிர புயலாக வலுப்பெற்று ஏமன் மற்றும் ஓமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை தொடர்பான விவரம் பின்வருமாறு-
21.10.2023 மற்றும் 22.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23.10.2023 மற்றும் 24.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.10.2023 முதல் 27.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க:
பூவன்- கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் வாழைக்கான விலை முன்னறிவிப்பு
வேளாண் பயிருக்கு 1.5 மற்றும் தோட்டக்கலை பயிருக்கு 5% - இது என்ன கணக்கு?
Share your comments