தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென அரசு ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் (Old pension plan)
2004ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. எனினும், 2004ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ஏற்க மறுத்த அரசு ஊழியர்கள், எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்கள் தற்போதும் தொடர்கிறது.
திமுக வாக்குறுதி (DMK promise)
நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அரசு ஊழியர்களின் ஆதரவும் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்தது. எனவே விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
நிதியமைச்சர்
ஆனால் அண்மையில் சட்டமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், முதல்வர் ஸ்டாலின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். நிதியமைச்சரின் இந்தக் கருத்தால், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி உருவானது. மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் கோரிக்கை
இந்நிலையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருவாரூரில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன் பங்கேற்று பேசினார். அப்போது அவர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு மனது வைக்குமா?
தங்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, அரசு அந்த மகிழ்ச்சியான அறிவிப்பை உடனடியாக வெளியிடும் என ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க...
மழையால் உச்சம் தொட்டத் தக்காளி- கிலோ ரூ.75!
குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!
Share your comments