தமிழகத்தில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட 34 பேருடன் தொடர்பில் இருந்த, 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று அறிகுறி கண்டறியப் பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் ஓய்வதற்குள், தமிழகத்திலும் ஒமிக்ரான் வேகமாகப் பரவிவருகிறது. கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் ஓடிய ஒளிந்த நிலையில், தற்போது ஒமிக்ரானும் ஆட்டம் காட்டத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில்,சென்னை கிண்டி மடுவங்கரையில், 16வது மெகாத் தடுப்பூசி முகாமை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தடுப்பூசி (Vaccine)
தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வாரம் தோறும் மெகாத் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி பேருக்கு தடுப்பூசிப் போடப்பட்டு உள்ளது.
மேலும் 100 பேருக்கு (For more than 100 people)
தமிழகத்தில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில், 12 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த 100க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு நலமுடன் உள்ளனர்.
மத்திய அரசு அறிவித்தபடி, ஜனவரி 3ல் இருந்து, 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் 33.2 லட்சம் பேர், 15 முதல் 18 வயதுக்குள் உள்ளவர்கள். அவர்களுக்கு பள்ளிகளுக்கே சென்றும், முகாம்கள் வாயிலாகவும் தடுப்பூசி போடப்படும்.
புதிய நியமணம் (New appointment)
விரைவில் 2,400 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒப்பந்த பணியாளர்களின் பணிக்காலம் வரும், 31ம் தேதி முடிய உள்ளது. ஆனால், மார்ச் 31 வரை யாரையும் விடுவிக்கக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
அறிவுறுத்தல் (Instruction)
இதனிடையே சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை சர்வதேச விமான நிலையங்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால், பரவல் தடுப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான நிலையங்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இல்லை: முதல்வர் அறிவிப்பு!
5 நாட்களுக்கு குளிர்ந்த வானிலை: காலநிலை ஆராய்ச்சி மையம் கணிப்பு!
Share your comments