ஓணம் பண்டிகையின் நிறைவு நாள் இன்று இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். அதேப் போல் இந்தியாவின் பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அவற்றின் விவரம் பின்வருமாறு-
”ஓணம் திருநாளில் அன்பான வாழ்த்துக்கள்! பாரம்பரியங்களின் அடிப்படையில் சமூகங்களை இணைக்கும் ஓணம், காலத்தால் அழியாத இரக்கம் மற்றும் தியாகத்தின் மதிப்புகளை நினைவூட்டுகிறது” என குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கேரளாவின் அனைத்து குடிமக்களுக்கும், நமது சகோதர சகோதரிகளுக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்! எண்ணற்ற அருட்கொடைகளுக்காக இந்த தருணத்தில் இயற்கை அன்னைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ”அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகள்! உங்கள் வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியம், இணையற்ற மகிழ்ச்சி, மகத்தான செழிப்பு பொழியட்டும். கடந்த பல ஆண்டுகளாக, ஓணம் உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது என்பது கேரளாவின் துடிப்பான கலாச்சாரத்தை அழகாக வெளிப்படுத்துகிறது” என ஒணம் பண்டிகைக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
ஓணம் திருநாளில், நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். மகாபலி நமக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள்புரியட்டும் - ஆளுநர் ரவி
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியின் விவரம் பின்வருமாறு
ஓணம் பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். கேரள மக்கள் அனைவராலும் எழுச்சியோடும் ஒற்றுமையோடும் கொண்டாடப்படும் அறுவடைப் பெருவிழாவாம் ஓணம் திருநாளை முன்னிட்டு மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் எனது ஓணம் வாழ்த்துகள்!
ஓணத்திருநாள் அன்று, தமிழ்நாட்டில் மலையாள மொழி பேசும் மக்கள் நிறைந்து வாழும் மாவட்டங்களான கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களுக்கு 2006-ஆம் ஆண்டும், தலைநகர் சென்னைக்கு 2007-ஆம் ஆண்டும் கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவடைத் திருநாளாக மட்டுமல்லாமல், வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட திராவிட மன்னனான மாவேலியைக் கேரள மக்கள் அன்போடு வரவேற்கும் விழாவாகவும் குறியீட்டளவில் ஓணம் கொண்டாடப்படுகிறது. இத்தகைய ஓணம் திருநாள் சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியிலும் "மாயோன் மேய ஓண நன்னாள்” எனச் சிறப்புடன் பாடப்பட்டிருக்கிறது.
இவ்வாறு திராவிடப் பண்பாட்டுடன் பிரிக்க முடியாது, இரண்டறக் கலந்துள்ள ஓணத்தையும் விட்டுவைக்காமல், ஒரு தரப்பினர் ”வாமன ஜெயந்தி" என அதன் அடையாளத்தைப் பறிக்க முயல்கிறார்கள். கேரள மக்களே இத்தகைய முயற்சிகளைப் புறக்கணிப்பார்கள். மக்களைப் பிளவுபடுத்தி, அதில் குளிர்காய நினைக்கும் சுயநல வஞ்சகர்கள் வீழ்ந்துபடும் ஓணமாக வரும் ஓணம் அமையும் வகையில் நாட்டு மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள்.
சமத்துவமும், வளர்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்த இந்தியாவை மீட்டெடுக்க நாம் அனைவரும் உறுதியேற்கிற நாளாக இந்த ஓணத் திருநாள் அமையட்டும்! நம் தென்னாட்டு மக்கள் காட்டிய முற்போக்கு அரசியல் பாதையில் ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் ஆண்டாக வருகிற ஆண்டு திகழட்டும். திராவிட மொழிக் குடும்பத்தின் உடன்பிறப்புகளான கேரள மக்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை எனது ஓணம் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க:
ஊக்கத்தொகையுடன் நெல் கொள்முதல்- தேதியை அறிவித்த முதல்வர்
தினமும் ஷாம்பூ போட்டு குளிக்கிறீங்களா? இந்த தகவல் உங்களுக்குத்தான்
Share your comments