தமிழகத்தில், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வருவாய்த்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு 331 பேருக்கு ரூ.75,90,700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழகத்தில் 532 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் காமராஜ் தொடர்ந்து கூறுகையில், தமிழகம் முழுவதும் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள், தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, டெல்டா மாவட்டங்களில் 300 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், மற்ற மாவட்டங்களில் 232 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் என மொத்தம் 532 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நெல் விளையும் அனைத்து மாவட்டங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் காமராஜ், வெளி மாவட்ட நெல் மூட்டைகள் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஏற்புடையதல்ல என்றார். கடந்த ஆண்டு தமிழகம் 24 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்ததை, நாங்களே விரைவில் முறியடிப்போம் என்றும் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகள் முடிவடைந்து விட்டன. அடுத்த 3 மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்குவதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதுகுறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் (One nation, one ration card scheme) அக்டோபர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நெல் கொள்முதலில் சாதனை
இதனிடையே, ஊரடங்கு காலகட்டத்தில் தமிழகம் அதிகளவு நெல் கொள்முதல் செய்துள்ளதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு துறைகளில் வேலையின்றி தவிக்கும் ஏழை எளிய மக்கள், தினக் கூலித் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் (Pradhan Mantri Garib Kalyan Yojana) கீழ் மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்தது. இதன் ஒரு பகுதியாகத் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட பயனாளிகள் 80 கோடி பேருக்கு மாதத்திற்கு ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்க வகை செய்யப்பட்டுள்ளது .
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி மூன்று மாதங்களுக்கு இந்த உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கால் பாதிக்கப்படும் சூழலில் உள்ள பிரிவினருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் 120 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
24.79 லட்சம் மெட்ரிக் நெல் கொள்முதல்
இந்த காலகட்டத்தில் நாடு முழுக்க 119 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் கடந்த 2019-20க்கான கரீஃப் சந்தை பருவத்தில் மொத்தம் 24.79 லட்சம் மெட்ரிக் டன் அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 4.94 லட்சம் மெட்ரிக் டன் நெல், ஊரடங்கு காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது. மேலும் கொள்முதல் பணிகளைத் துரிதப்படுத்தும் விதமாக, கொள்முதல் மையங்களின் எண்ணிக்கை 1766-ல் இருந்து இந்த ஆண்டில் 2094 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு அமலான முதல் நாளிலிருந்து அந்தந்தப் பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து சேமிப்புக் கிடங்குகளும் வாரத்தின் 7 நாட்களும் செயல்பட்டதாக இந்திய உணவுக் கழகம் கூறியுள்ளது. தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் போதிய உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
மானிய விலையில் காய்கறி விதைகள் - தோட்டக்கலை துறை!
பதநீரைக் குளிர்பானமாக மாற்ற புதிய திட்டம்
கலப்பினம் இல்லாத பாரம்பரிய நெல் ரகங்கள்! - இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி
Share your comments