புதிய தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி மற்றும் உள்ளூர் மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 14 பொறியியல் கல்லுாரிகள் தமிழ் உட்பட ஐந்து மாநில மொழிகளில் கல்வி கற்பிக்கப்பட உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தெரிவித்தார்.
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, நேற்றுடன் ஓராண்டு முடிவடைந்தது. இதையொட்டி பிரதமர் மோடி மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார்.'வீடியோ கான்பரன்ஸிங்' வழியாக நடந்த இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பல்வேறு மாநில முதல்வர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க கொள்கை சீர்திருத்தங்களில் ஒன்றான புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்து உள்ளது. ஒட்டு மொத்த உலகமும் கொரோனாவினால் (Corona) தடுமாறிய நேரத்தில் மத்திய அரசு மாற்றத்திற்கான கொள்கையை வகுத்துள்ளது. இந்த கல்வி கொள்கையை, களத்திற்கு கொண்டு வர பலர் கடுமையாக உழைத்துள்ளனர். கொரோனா காலத்தில் நாட்டின் கல்வி கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளோம்; இது, நாட்டின் விதியை வடிவமைக்கிறது.
லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னாட்சி பெற்ற கல்வி அமைப்புகள் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று கல்வி கொள்கை படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது. புதிய கல்வி கொள்கை மிகப்பெரிய தொலைநோக்கு திட்டம். நாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் கல்வி தான், நம் நாட்டின் எதிர்காலம். புதிய இந்தியாவில் புதிய கல்வி கொள்கை மிக முக்கிய பங்களிப்பை அளிக்க உள்ளது. உயர் மற்றும் தரமான கல்விக்கு வெளிநாட்டிற்கு சென்ற காலம் உண்டு. தற்போது வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வருகின்றனர். இதனை கண்கூடாக பார்க்கிறோம்.
இளைஞர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்வியை தேர்வு செய்யும் வகையில் புதிய கொள்கை அமைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு தேர்வு மீதான பயத்தில் இருந்து விடுதலை அளிக்கிறது.நம் இளைஞர்கள் மாற்றத்திற்கு முழுமையான அளவில் தயார் நிலையில் உள்ளனர். எந்த இடத்திற்கு போனாலும் இக்கால இளைஞர்கள் உச்சத்தை தொடும் வகையில் புதிய கல்வி கொள்கை அமைந்து உள்ளது. கொரோனா தொற்று உலக நாடுகளின் நிலைமையை மாற்றியது.
ஆனால் இந்த மாற்றத்தை எளிதாக கையாண்ட நம் மாணவர்கள் 'ஆன்லைன்' வழி கல்விக்கு தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு நம் இளைஞர்கள் புதிய பாதையை காட்டுகின்றனர். 21ம் நுாற்றாண்டில் இளைஞர்கள் தனித்துவமான செயலாக்கத்தை விரும்புகின்றனர்.
சுதந்திரம் பெற்றவர்களாகவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் இருப்பதையே, நம் இளைஞர்கள் விரும்புகின்றனர். இதற்கான உத்தரவாதத்தை புதிய கல்வி கொள்கை அளிப்பது உடன் நம் தேசம் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் என்ற உத்தரவாதத்தையும் வழங்குகிறது. புதிய தேசிய கல்வி கொள்கையில் தாய்மொழிக்கு (Mother Tounge) அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. உயர் கல்வியை தாய்மொழியில் படித்தால் மாணவர்களின் அறிவு திறன் மேலும் மேம்படும்.
நாட்டில் பொறியியல் கல்வி பாடங்களை, 11 மொழிகளில் மொழிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது எட்டு மாநிலங்களில், 14 பொறியியல் கல்லுாரிகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் வங்க மொழிகளில் கல்வி கற்பிக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான விஷயம். மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாற்று திறனாளி மாணவர்களுக்கு சைகை வழி கல்வி தேவைப்படுகிறது. இதை கருத்தில் வைத்து சைகை வழி கல்வி, தேசிய கல்வி கொள்கையில் ஒரு தனிப்பாடமாகவே சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
அறிவுக்களஞ்சியமாக மாற்றுவோம்
புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கத்திலும், கல்வியை எளிமையாக அனைவரும் கற்கும் வகையிலும் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் அறிவுக் களஞ்சியமாக, 21ம் நுாற்றாண்டில் இந்தியா திகழ வேண்டும் என்ற நம் எண்ணத்தை, ஆசையை நிறைவேற்ற புதிய கல்வி கொள்கை வழிகாட்டுகிறது. நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி, இந்தியாவை அறிவுக் களஞ்சிமாக மாற்றுவோம்.
மேலும் படிக்க
கொரோனா உயிரிழப்பு 21% அதிகரிப்பு: தடுப்பூசி ஒன்றே தீர்வு என WHO அறிவிப்பு!
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Share your comments