1. செய்திகள்

25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம்- விதிமுறைகள் என்ன?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

Ordinance to create 25 traditional restaurants at uzhavar sandhai Tamilnadu

25 உழவர் சந்தைகளில் ஏற்கெனவே செயல்படும் உணவகங்களை தொன்மை சார் உணவகங்களாக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மாற்றம் செய்திட அனுமதி வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2023-2024 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், 25 உழவர் சந்தைகளில் ஏற்கெனவே செயல்படும் உணவகங்களை தொன்மை சார் உணவகங்களாக மாற்றம் செய்யப்படவுள்ளன என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். அமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க உணவகங்களை மாற்றுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொன்மைசார் உணவகங்கள் அமைத்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு-

  1. உழவர் சந்தையில் தொன்மை சார் உணவகம் அதிகாலை 4.00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டும் நடத்தப்பட வேண்டும்.
  2. இவ்வுணவகத்தில் பாரம்பரிய உணவு வகைகள், மருத்துவ குணம் கொண்ட சூப் வகைகள், சிறுதானிய கூழ் வகைகள், சுண்டல் வகைகள், சிறு தானிய உணவுகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானிய திண்பண்ட வகைகள் அந்தந்த இடங்களிலுள்ள தனித்துவமான உணவுப் பொருட்கள், புவிசார் குறியீடு பெற்ற உணவுப்பொருட்கள், கருப்பட்டி காபி, பதநீர், நீரா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.
  3. உணவகங்களில் வழக்கமாக பரிமாறப்படும் உணவு வகைகளை தவிர்த்து பாரம்பரிய மற்றும் பகுதி சார்ந்த சிறப்பு உணவுகளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  4. உணவகத்திற்கு இலக்கிய நயம் வாய்ந்த பெயர்கள் சூட்டப்பட்டு பெயர் பலகைகளில் எழுதிட வேண்டும்.
  5. உணவகம் நடத்துபவர்கள் எவ்வகையான உணவு வகைகள் மற்றும் திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படும் என பட்டியலிட்டு சந்தை நிர்வாக அலுவலர் / வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
  6. உணவகம் நடத்துவோர் உழவர் சந்தை விதிமுறைகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும்.
  7. உணவு பாதுகாப்பு துறையில் உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழ் (FSSAI) பெற்று அதன்படி உணவகம் நடத்தப்பட வேண்டும்.
  8. பாரம்பரிய உணவகம் நடத்துவோர் அதற்கு தேவையான உபகரணங்கள், தளவாடங்கள் போன்றவற்றை தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
  9. இவ்வுணவகத்தால் உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  10. உழவர் சந்தை விதிமுறைகளை மீறும் பொழுதும், உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் நுகர்வோர்க்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உணவகம் நடத்துவோர் நடந்து கொள்ளும் பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உழவர் சந்தை உணவக ஒப்பந்தத்தை இரத்து செய்ய சந்தை நிர்வாக அலுவலர் / வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) / விற்பனைக்குழு செயலாளர் அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
  • பாரம்பரிய பாக்கு மட்டை தட்டு வகைகள், வாழை இலைகள் மற்றும் எளிதில் மக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத / மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலான பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
  • நெகிழி பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்தக்கூடாது. உணவகம் நடத்தி முடித்த பின்னர் கழிவுகளை முறைப்படி அகற்றி உழவர்சந்தை வளாகம் சுத்தமும் சுகாதாரமாக பேண வழிவகை செய்ய வேண்டும்.
  • புதிய வகை உணவு விற்பனை செய்யத்துவங்கும் முன் சந்தை நிர்வாக அலுவலர்/வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
  • உணவு வகைகளுடைய விலைகளைப் பொறுத்தமட்டில் குத்தகை உரிமைதாரர், விவசாயிகள், நுகர்வோர்கள், சந்தை நிர்வாக அலுவலர், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தலைமையில் குழு அமைத்து முடிவு செய்யப்பட வேண்டும்.
  • தற்போதுள்ள உரிமையாளர் மாறுவதாக இருந்தால், தொன்மை சார் உணவகம் நடத்துவதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
  • ஒரு உழவர் சந்தைக்கு ஒரு தொன்மை சார் உணவகத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
  • உணவக உரிமம் மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் அதிகத் தொகை கோருவோருக்கு அளிக்கப்பட வேண்டும்.
  • வாடகையானது ஏற்கனவே உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட தகவலை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Photo Credit: S_James

மேலும் காண்க:

Project Cheetah- பாலியல் உறவு சீண்டலில் விபரீதம்.. மேலும் ஒரு சிவிங்கிப்புலி பலி!

English Summary: Ordinance to create 25 traditional restaurants at uzhavar sandhai Tamilnadu

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.