சென்னை-மழையால் பாதிக்கப்பட்டு, உடல் இரண்டு துண்டாகும் நிலையில் உயிருக்குப் போராடிய நாக பாம்புக்கு, ஆக்சிஜன்முகமூடி வசதியுடன் அறுவை சிகிச்சை செய்து, வனத்துறையினர் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
வெள்ளத்தில் மிதந்தச் சென்னை (Chennai floating in the flood)
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கன மழையால், பல இடங்களில் மழை நீர் தேங்கி, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தேங்கிய மழை நீரில் சாக்கடையும் கலந்துகொண்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரட்டூர் பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அங்கு சூழ்ந்திருந்த எலிக்கூட்டத்தை அகற்ற முற்பட்டபோது, பாம்புகளும் இருந்து தெரியவந்தது.
இயந்திரத்தில் சிக்கிய பாம்பு (Snake trapped in the machine)
இந்தப் பணிகளின்போது, எதிர்பாராதவிதமாக நாகப்பாம்பு ஒன்று இயந்திரத்திற்குள் சிக்கியது. இதனால், நாகப்பாம்பின் உடல் இரண்டு துண்டாகும் நிலை ஏற்பட்டது. தகவலறிந்த, வேளச்சேரி வன உயிரின பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்து சென்று, பாம்பை மீட்டனர்.
அறுவை சிகிச்சை (surgery)
மரணத்தின் விளிம்பில் இருந்த நாக பாம்புக்கு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வனத்துறை மருத்துவர்கள் முடிவு செய்தனர். அடையாறில் உள்ள சவான் என்பவரது மருத்துவமனையில், அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சையின் போது, மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க, பாம்பின் முகபகுதிக்கு ஆக்சிஜன் செல்லும் வகையிலான முகமூடி அணிவிக்கப்பட்டது.
மறுவாழ்வு (Rehabilitation)
அதன்பின், உடலின் வெட்டுப்பட்ட இடத்தில், காயத்துக்கு மருந்து செலுத்தி, தையல் போட்டு, அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் நிறைவு செய்தனர். பாம்பு நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விலங்குநேயம்
மரணத்தின் விளிம்புக்கு சென்ற நாகப்பாம்புக்கு, வனத்துறையின் சாதுர்யமான நடவடிக்கையால் மறுவாழ்வு கிடைத்துஉள்ளது. இதுவல்லவா ஐந்தறிவு ஜீவன்களுக்கு காட்டும் வனவிலங்குநேயம்.
மேலும் படிக்க...
Share your comments