
அத்திக்கடவு-அவிநாசி எனும் 3 தலைமுறைகளின் கனவுத் திட்டத்தால், 52 ஆண்டுகளுக்கு பிறகு நெல் நடவுப் பணிகளில் தொரவலூர் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு என 3 மாவட்ட மக்களின் 3 தலைமுறையினருக்கும் மேலான கனவாக அத்திக்கடவு- அவிநாசி திட்டம் இருந்தது.
இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அத்திக்கடவு- அவிநாசி போராட்டக் குழுவினர் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியின்போது ரூ.1,916 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அத்திக்கடவு- அவிநாசி திட்டப் பணிகள் தொடங்கின. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
3 மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தால், பல்வேறு கிராமங்களில் குளம், குட்டைகள் நீர் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அவிநாசி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் புத்துயிர் பெற்றுள்ளது. தொரவலூரில் உள்ள குட்டையில் நீர் நிரம்பிய நிலையில், 52 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, “எங்கள் பகுதியில் சிறு தானியங்களும், மானாவாரி பயிர்கள் மட்டுமே பயிரிட்டு வந்த நிலையில், தற்போது அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தால் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம்
எங்களின் பள்ளி வயதில் இந்த பகுதியில் நெல் சாகுபடி நடைபெற்றது. அதன்பிறகு 52 ஆண்டுகளுக்குப் பிறகு நெல் விவசாயத்தை இப்போதுதான் பார்க்கிறோம். எங்கள் கிணறுகளிலும் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது’’ என்றனர்.
அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகிலுள்ள பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சி மிக்க அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி, நம்பியூர், புளியம்பட்டி பகுதிகளிலுள்ள முப்பத்தி ஒன்று ஏரிகளையும், நாற்பது ஊராட்சி ஒன்றியக் குளங்களையும், ஏனைய 538 நீர் நிலைகளையும் நிரப்பும், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல், குடிநீர் வழங்கல் திட்டமாகும்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு பணிகளுக்காக, கடந்த 2016- ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ரூ. 3.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக முதல்வராக பதவியேற்ற பழனிசாமி, 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் தொடங்கின. இந்த திட்டத்திற்கு, ரூ. 1,652 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்பின் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 17, 2024 ஆம் தேதியன்று காணொளி காட்சி மூலம் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
Read more:
Share your comments