நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைதான், நம்மை அடுத்தக் கட்டப் பயணத்திற்கு தயாராக்கிவிடுகிறது. அவ்வாறு பெங்களுர் IT நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிவரும், சுரேஷ்குமார் என்ற இயற்கை விவசாயி, தற்போது, 24 மணி நேரமும், வயலில் இருந்தபடியே அலுவலக வேலையையும் செய்துகொண்டு அதிக மகசூலும் பார்த்திருக்கிறார்.
அது எப்படி சாத்தியமானது என்பது குறித்து அவரிடம் பேசியதில் இருந்து,
6 வருடங்களைக் கடந்து 7-வது வருடமாக இயற்கை விவசாயத்தைத் தொடர்கிறேன். ஒரு முறை எனது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, இயற்கை மருத்துவத்திற்கு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினார். அப்போது அவர்களுக்காக, இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்தப் பொருட்களை அதிகவிலை கொடுத்து வாங்கியபோதும், அவற்றில் அத்தனை பலனில்லை. எனவே தரமான பொருட்களுக்காக, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நாம், ஏன் இயற்கை விவசாயத்தைக் கையில் எடுக்கக்கூடாது எனத் தோன்றியது.
எண்ணத்தை நிறைவேற்ற கடந்த 2013ம் ஆண்டு 4 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தைத் தொடங்கினேன். நான் I.T நிறுவன ஊழியர் என்பதால், பெங்களூரில் இருந்து வார விடுமுறைக்கு மட்டுமே விருத்தாசலம் வந்து, டி.வி. புதூரில் உள்ள எனது நிலத்தில் இயற்கை விவசாயத்தை கவனிப்பேன்.
முதல் ஆண்டிலேயே ரசாயன விவசாயத்திற்கு நிகராக மகசூல் கிடைத்தது, என்னைத் தொடர்ந்து பயணிக்க உதவியது. இதனால் தற்போது 10 ஏக்கர் பரப்பில், ஆத்தூர் கிச்சிலி சம்பா, சேலம் சன்னரகம், மாப்பிள்ளை சம்பா, சொர்ணமசூரி போன்ற ரகங்கள் நல்ல மகசூல் கொடுக்கின்றன. பாரம்பரிய ரகமான கருப்புக்கவுணி அரிசி மட்டும் 6 ஏக்கரில் சாகுபடி செய்கிறேன்.
தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்து, விதைக்கிறேன். ஒரு போகத்தின்போது, இடையில், 2 முறைத் தக்கப்பூண்டு மற்றும் பல தானியங்களையும் விதைத்தேன். குறிப்பாக அமிர்தக்கரைசல், பஞ்சகவ்யா, சொந்தத்தயாரிப்பான பலவகை சத்துக்களைக் கொண்ட எரு போன்றவற்றைக் கொண்டு களை எடுத்து, பூச்சித்தாக்குதலை நீக்கி சாகுபடி செய்கிறேன். அவ்வாறு இயற்கை முறையில் சாகுபடிசெய்த பாரம்பரிய ரக அரிசியை கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.
சாதம் கெட்டுப்போகாது
அரிசி என்று பார்க்கும்போது, அறுவடை செய்த 6 முதல் 8 மாதங்களுக்கு பிறகு பயன்படுத்தும்போதுதான் நல்ல சுவை கிடைக்கும். நீண்ட நேரம் கெட்டுப்போகாது. ரசாயன அரிசியோடு ஒப்பிடும்போது, இந்த அரிசியில் வடிக்கும் சாதத்தின் அளவு அதிகமாக இருப்பதுடன், சத்துக்களும் நிறைந்திருக்கும்.
விதை நெல் விற்பனை
இதைத்தவிர விதைநெல்லை 60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். இதன்மூலம் மூட்டைக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடிகிறது.
விவசாயிகள் குழு
அதேநேரத்தில் இயற்கை விவசாயத்தில் நுழைந்துள்ள புதிய விவசாயிகளை ஊக்குவித்து வழிநடத்தி, அவர்களது விளைபொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளேன். இதில் 150 விவசாயிகள் உள்ளனர். இருப்பினும், எங்கள் விளைபொருட்களுக்கு எப்போதுமே தட்டுப்பாடுதான். ஏனெனில் மக்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா காலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டதா?
இல்லை. அந்த சமயம் பொதுநல நோக்குடன், கருப்புக்கவுணி அரிசியை மாவாக மாற்றி, 10 ரூபாய் பாக்கெட்டுகளாகப் பெட்டிக்கடை வரை விற்பனை செய்தோம். நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் கருப்புக்கவுணி என்பதால் வியாபாரம் சூடு பிடித்தது. இருந்தாலும் மக்களின் தேவைக்கு ஏற்ப எங்களால் பொருட்களைக் கொடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு நெல் உற்பத்தி செய்ய முடியவில்லை.
கடந்த ஆண்டு வரை வார இறுதிநாட்களில் மட்டுமே விருத்தாசலம் வந்து விவசாயம் செய்த நான், கொரோனாவால், வயல்வெளியில் இருந்த படியே அலுவலக வேலைகளையும் பார்க்கிறேன். விவசாயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தினேன். இதனால், மூன்றரை ஏக்கரில், AST 16 எனப்படும் ரக நெல், 100 மூட்டையை(மூட்டைக்கு 75 கிலோ)அறுவடை செய்ய முடிந்தது. எனவே இயற்கை விவசாயத்தின் பக்கம் இன்னும் பல விவசாயிகள் திரும்பினால், தட்டுப்பாடும் தீரும், நஞ்சில்லா உணவு நம் உணவு மேஜைக்கு வருவதுடன், நம் எதிர்கால சந்ததிக்கும் கிடைக்கும்.
தொடர்புக்கு
சுரேஷ் குமார்
இயற்கை விவசாயி
8073573403
மேலும் படிக்க...
பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி?
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிகள்-அரசாணையாக வெளியிட்டது தமிழக அரசு!
Share your comments