நடப்பு காரிஃப் பருவத்தில் (Cariff season) குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பாக உணவு தானியங்கள் சிறப்பான முறையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
நெல் கொள்முதல்:
மத்திய வேளாண் அமைச்சகம் (Central Ministry of Agriculture) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு & காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 17ஆம் தேதி வரையில் மொத்தம் 405.31 லட்சம் மெட்ரிக் டன் அளவு நெல் கொள்முதல் (Paddy Purchase) செய்யப்பட்டுள்ளது. 2019-20 காரிஃப் பருவத்தின் இதே காலகட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவை விட இது 23.70 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் கிட்டத்தட்ட 47.17 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக (Minimum support price) ரூ.76,524.14 கோடி கிடைத்துள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை:
நெல் மட்டுமல்லாமல் பருப்பு உள்ளிட்ட பயிர்களும் அதிகமான அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 48.11 லட்சம் டன் அளவு பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான கொப்பரைத் தேங்காய் (Copper Coconut) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, 48.11 மெட்ரிக் டன் அளவிலான பருப்பு மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.
சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்தால், மற்ற மாநிலங்களில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, வேண்டுகோள் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நெல் கொள்முதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
சூரியகாந்திப் பயிரில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தி, மகசூலை அதிகரிக்கும் வழிகள்!
Share your comments