ஆனைமலை ஒன்றிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, நெல் விதைப்பண்ணைகளில், விதை சான்றளிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், நடப்பாண்டு முதல் போகத்தில், 1,400 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில், ஆனைமலை முக்கோணம் மற்றும் இந்திராநகர் பகுதிகளில், 25 ஏக்கரில் அரசு நெல் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உற்பத்தியாகும் நெல் விதை, தமிழகம் முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நெல் விதைப்பண்ணைகளை நேற்று முன்தினம், விதைச் சான்றளிப்புத் துறை உதவி இயக்குனர் வானதி தலைமையில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பொள்ளாச்சி விதைச்சான்று அலுவலர் நந்தினி, விதைச்சான்று உதவி அலுவலர் சின்னதுரை ஆகியோர் பங்கேற்றனர்.
விதைப் பண்ணைகள்
விதைச் சான்றளிப்புத் துறை உதவி இயக்குனர் வானதி கூறியதாவது: ஆனைமலை ஒன்றியத்தில், இந்தாண்டு குறுவை நெல் சாகுபடியில், அரசு மற்றும் தனியார் சார்பில், விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அரசு விதைப்பண்ணைகளில், 20 ஏக்கரில், கோ - 51 மற்றும் ஐந்து ஏக்கரில், ஏ.எஸ்.டி., - 16 ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆய்வு செய்ததில், நெல் பயிர்கள் நல்ல முளைப்புத்திறனுடன், மற்ற ரகங்கள் கலப்பின்றி உள்ளது.அரசு சார்பில் விதைப்பண்ணைகள் அமைக்கப்படும் போது, விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் விதைகள், இடுபொருட்கள் வழங்கப்படும். அறுவடையான நெல்ச விதைகள், கிலோவுக்கு, 30 ரூபாய் வரையில் விலை கொடுத்து, அரசே கொள்முதல் செய்து கொள்கிறது.சந்தையில், விவசாயிகளின் நெல்லுக்கு அதிகபட்சமாக, கிலோவுக்கு, 20 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கிறது. விவசாயிகள் நெல் விதைப்பண்ணை அமைக்க முன்வரச வேண்டும்.
மேலும் படிக்க
Share your comments