பேப்பர் விலை ஒரே ஆண்டில் இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏப்ரல் 1 முதல் 'ஆப்செட் பிரின்டிங்' பணிகளுக்கு 40 சதவீத கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட பேப்பர் அலாய்டு விற்பனையாளர்கள் சங்க செயலர் விஸ்வநாதன் கூறியதாவது: வெளிநாட்டில் இருந்து பேப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதை காரணம் காட்டி பேப்பர் விலை 2021 பிப்ரவரி முதல் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
பேப்பர் விலை உயர்வு (Paper Price Increased)
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற காகித ஆலைகளான டி.என்.பி.எல்., சேசாய், பலார்பூர் ஜெ.கே. வேஸ்ட் கோர்ட்ஸ், ஆந்திரா பேப்பர் ஆலை ஆகியவற்றுக்கு தேவையான மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தன. அவை தற்போது முற்றிலும் நின்று விட்டன. காகித ஆலைகள் தங்கள் தயாரிப்பு பேப்பர் உள்ளிட்டவற்றின் விலையை ஜனவரி 15 முதல் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இரண்டு மாதத்தில் பேப்பர் விலை டன்னுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த 2021 மார்ச்சில் 'நியூஸ் பிரின்ட்' டன் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. படிப்படியாக உயர்ந்து நேற்று 70 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிராப்ட் பேப்பர் 36 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது 80 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. டூ பிளஸ் 4 பேப்பர் டன் 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது 70 ஆயிரம் ரூபாயாகவும் மேப்லித்தோ டன் 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது 86 ஆயிரம் ரூபாயாகவும் ஹார்ட் பேப்பர் 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது 1.20 லட்சம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளன. இந்த விலையில் இன்று துவங்கி ஏப்ரல் 1க்குள் மேலும் டன்னுக்கு 4000 - 7500 ரூபாய் வரை விலை உயர உள்ளதாக காகித ஆலைகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளன.
பேப்பர் விலை உயர்வால் திருமண அழைப்பிதழ் நோட்டீஸ் போஸ்டர் மாணவ - மாணவியர் பயன்படுத்தும் நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றின் விலையை உயர்த்த தயாரிப்பாளர்கள் வியாபாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கடும் பாதிப்பு (Severe damage)
சேலம் மாவட்ட ஆப்செட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் செயலர் சீனிவாசன் கூறியதாவது: காகித ஆலைகள் பேப்பரை கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் விற்பனை செய்த விலையை விட இரண்டு மடங்காக விலையை உயர்த்தி உள்ளன. அச்சுமைக்கு இடையே கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த தொழிலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலை தொடர வேறு வழியின்றி வரும் ஏப். 1 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அச்சகங்களிலும் பிரின்டிங் வேலைகளுக்கு 40 சதவீதம் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments