1. செய்திகள்

பேரழிவுக்கான பாதை தான் பரந்தூர் விமான நிலைய திட்டம்: விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Path to Disaster - Parandhur Airport

சென்னையில் மழை விட்டு ஒரு வார காலத்துக்கும் மேல் ஆகிறது. ஆனால், பரந்தூர் பகுதியில் அமைந்திருக்கும் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கிநிற்கும் மழை நீர் வடிந்தபாடில்லை. பல ஏக்கர் பரப்பளவில் பயிரடப்பட்ட விளை நிலங்களை சூழ்ந்து கொண்டு மழை நீர் தேங்கி கடல்போல காட்சியளிக்கும் இப்பகுதிதான், சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏக்னாபுரத்தில், கடந்த வாரம் பெய்த மழையால் தனது நான்கு ஏக்கர் பரப்பளவிலான விளைநிலத்தில் மழைநீர் சூழ்ந்து பயிர்கள் சேதமடைந்தது கூட 80 வயது மனோகருக்கு கவலையை ஏற்படுத்தவில்லை. விமான நிலைய திட்டப் பணிகளுக்காக தனது நிலமே பறிபோகப் போகிறது என்ற கவலைதான் அவரை வாட்டி வருகிறது.

பரந்தூர் (Parandhur)

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் பரந்தூர் அருகே 13 கிராமங்கள் மற்றும் விளைநிலங்கள் உள்பட 4500 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசு தேர்வு செய்திருக்கிறது. இதில், ஒட்டுமொத்தமாக ஏக்னாபுரம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட 900 ஏக்கர் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. ஏக்னாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை மழை விட்டு ஒரு வார காலத்துக்குப் பிறகு சென்று பார்த்த போது, விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட ஒட்டுமொத்த இடத்தில் 60 சதவீத நிலப்பரப்பு வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள குளங்கள், ஏரிகள் நிரம்பி பல நூறு கனஅடி நீர் இப்பகுதிகளில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது.

இந்த அளவுக்கு நீர்தேங்கும் பகுதியில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு விமான நிலையம் வந்தாலும், இப்பகுதிக்கு வராமல் நீர்வரத்துப் பாதையை திசைதிருப்பினாலும் வெள்ள பாதிப்பு நிலைமை மிகவும் மோசமடையும் என்று கிராம மக்களும் நிபுணர்களும் கருதுகிறார்கள்.

பேரழிவுக்கான பாதை (Path To Disaster)

பரந்தூர் விமான நிலையம் என்பது "பேரழிவுக்கான பாதை" என்ற தலைப்பில், மக்கள், சுற்றுச்சூழலியலாளர்கள், 2008ஆம் ஆண்டு பரந்தூர் பகுதி விமான நிலையம் அமைப்பதற்கு உகந்ததா என்பதை ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றிருந்த மோகன் ரங்கநாதன் உள்ளிட்டோர், திறந்த கடிதம் ஒன்றை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைக் கழகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், இந்திய அறிவியல் மையத்தின் நீர் ஆராய்ச்சிக்கான இடை-ஒழுங்குமுறை மையம் நடத்திய ஆய்வில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 800 கன அடி நீர்தான் வெளியேற்றப்பட்டது. ஆனால், அந்த உபரி நீருக்கு, இணையாக நீர்ப்பிடிப்பு பகுதிகளான மணிமங்கலம், பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளிலிருந்து வந்த மழைநீரின் பங்களிப்பு இதனை விட சுமார் நான்கு மடங்கு அதிகம். இவை இரண்டும் சேர்ந்து இந்தப் பகுதிக்குள் நுழையும் போது அதன் அளவு 1.34 லட்சம் கன அடியாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த அளவு கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது வெளியான புள்ளிவிவரமாகும்.

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரானப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் எஸ்.டி. கதிரேசன் கூறுகையில், பரிந்துரைக்கப்பட்டபடி, இவ்விடத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், 43 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட 84 ஏரிகளை நிரப்ப வகை செய்யும் கம்பன் கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரியை அடைவதற்கு முன்பே தடைபட்டுப்போய்விடும். கிட்டத்தட்ட கம்பன் கால்வாயின் 7 கிலோ மீட்டர் தொலை இந்த விமான நிலையம் கட்டுவதற்கு தேர்வான இடத்துக்குள் தான் வருகிறது.

இங்கிருக்கும் விவசாயிகள், இதுவரை எந்த பம்பு செட்டுகளையும் விவசாயத்துக்குப் பயன்படுத்தியதில்லை. ஏரி நீரை நம்பியே விவசாயம் செய்து வருகிறார்கள். இதுதான் மிகப் பழமையான விவசாய நடைமுறை. ஒரு வேளை, இவ்விடத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், நீர்நிலைகள் எலும்புக்கூடுகளாகி ஒரு பக்கம் வெள்ள பாதிப்பையும், மறுபக்கம் உணவுப் பஞ்சத்தையும் உருவாக்கிவிடும் என்கிறார்.

எதிர்க்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அளித்த அறிக்கையில், பரந்தூர் விமான நிலையத்துக்காகக் கையகப்படுத்தப்படும் 4,563.56 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 1,317 ஏக்கர் நிலப்பரப்பு புறம்போக்கு நிலங்களாக உள்ளன. இது தவிர்த்து, கிட்டத்தட்ட 955 ஏக்கர் நிலப்பரப்பு ஏரிகள், குளங்கள், சிறிய குட்டைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொழில்துறை அமைச்சகத்தின் கூடுதல் முதன்மைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் கூறுகையில், நாம் பருவமழைக் காலத்தின் நடுப்பகுதியில் இருக்கிறோம். எனவே, அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியிருக்கின்றன. ஆமாம், கம்பன் கால்வாயின் ஒரு குறிப்பிட்ட பகுதி விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலப்பரப்புக்குள் தான் வருகிறது. நீரியல் சார்ந்த விரிவான ஆய்வு நடத்தப்படும். அனைத்து விதமான கருத்துகளும் ஏற்கப்பட்டு, ஆலோசனை நடத்தியே எந்தவொரு முடிவும் எடுக்கப்படும். எந்தவொரு திட்டப் பணியையும் வடிவமைக்கும்போதும், மேம்படுத்தும் போதும், அனைத்து விவகாரங்களையும் கவனத்தில் கொண்டு சமநிலைப்படுத்த வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தே செயல்படுகிறோம் என்கிறார்.

மேலும் படிக்க

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

"எங்களை வாழ விடுங்கள்": தஞ்சையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்!

English Summary: Path to disaster: Parantur airport project: Farmers, environmentalists protest! Published on: 21 December 2022, 08:23 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.