தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று காலை தொடங்கியது. திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தான் பயின்ற இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் தேர்வு வகுப்பறைகளையும், அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்து மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மார்ச் 13 ஆம் தேதியான இன்று தொடங்கிய பிளஸ் 2 தேர்வுகள் வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனைப்போல் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கும் பிளஸ் 1 பொதுத்தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி வரையும், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் நடைபெறும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வானது பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப்போல் இன்று காலை திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தான் பயின்ற இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் தேர்வு வகுப்பறைகளையும், அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்து மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் வசதிக்காக தேர்வு அறைகளில் போதிய மின்சார வசதி, குடிநீர் வசதி, இருக்கை வசதிகளை உறுதி செய்ய அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை பூர்த்தி செய்து அதனை சரிபார்ப்பதற்கும், பின்னர் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வை எழுதுவதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த தேர்வை கண்காணிக்க பொறுப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் இந்த பணிகளை உன்னிப்பாக கவனிக்கின்றனர். முதல் நாளான இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெறும் நிலையில் அடுத்த மாதம் (ஏப்ரல்-03) ஆம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகளுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு பெற உள்ளது. இதன்பின்னர் அடுத்த மாதம் 10-ந் தேதியில் இருந்து 21-ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணியில் ஏறத்தாழ 48 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருத்தும் பணி நிறைவடைந்தப்பின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற மே மாதம் 5-ஆம் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காண்க:
ஒரு நாளைக்கு சராசரியாக 8 விவசாயிகள் தற்கொலை- அரசு வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்
Share your comments